முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில், மினி சூப்பர் மார்க்கெட் போல் ரேஷன் கடைகள் செயல்பட்டன என திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
திமுக சார்பில் அதிமுகவை “நிராகரிக்கிறோம’’ என்ற தலைப்பில் திருவண்ணாமலை சகாய நகரில் நேற்று முன்தினம் மாலை பிரச்சாரம் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, “இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் என்ற நிலையை முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவாக்கினார். இதனை, அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டுமென உச்ச நீதிமன்றம் கூறியது. துவரம் பருப்பு விலை உயர்ந்துபோது மக்களுக்கு சுமை ஏற்பட்டது.
இதையறிந்த கருணாநிதி, ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலையில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் வழங்க உத்தரவிட்டார். மசாலாப் பொருட்களை பாக்கெட்டுகளில் தயார் செய்து வழங்கப்பட்டது. கருணாநிதி ஆட்சியில், ரேஷன் கடைகள் அனைத்தும் மினி சூப்பர் மார்க்கெட் போல் செய்யப்பட்டது.
இப்போதைய ஆட்சியாளர்கள் உளுத்தம் பருப்பு வழங்க மறுக்கிறார்கள்” என்றார்.