தமிழகம்

அவசர கதியில் திறக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டம்: உள்கட்டமைப்பு வசதிகள் எங்கே?-ஸ்டாலின் கேள்வி

செய்திப்பிரிவு

ஆட்சியருக்கு அலுவலகம் இல்லை, எஸ்.பி.க்கு அலுவலகம் இல்லை. அவசர கதியில் திறக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் எந்த உள்கட்டமைப்பு வசதியையும் ஏற்படுத்தாதது ஏன்? பேர் வைத்தாயே, சோறு வைத்தாயா? என்பது போல்தான் முதல்வர் பழனிசாமியின் செயல் உள்ளது என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

நாகை, திருவாரூர் மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டப்பேரவைத் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி வாயிலாகப் பேசியதாவது:

“இன்றைய தினம் காலையில் அவசர அவசரமாக மயிலாடுதுறை மாவட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார் முதல்வர் பழனிசாமி. மயிலாடுதுறை மாவட்டத்தை அறிவித்தீர்களே, என்ன செய்தீர்கள் என்று நான் மாலையில் கேள்வி எழுப்புவேன் என்பதை உணர்ந்து இன்று காலையில் தொடங்கி வைத்துள்ளார் முதல்வர்.

மயிலாடுதுறை என்ற புதிய மாவட்டம் குறித்து கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல்வர் அறிவிப்பு செய்தார். ஏப்ரல் 7ஆம் தேதி இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. சிறப்பு அதிகாரி ஒருவரை ஜூன் மாதம் நியமித்தார்கள். எல்லைப் பிரிப்புக் குழுவை அமைத்தார்கள். இதுவரை எல்லை பிரிக்கப்பட்டதா? ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய 8 மாதங்கள் போய்விட்டன. இன்று டிசம்பர் 28. அதாவது ஒன்பதாவது மாதமும் முடிந்துவிட்டது.

மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்துக்கு ஆட்சியர் அலுவலகம் எங்கே? காவல்துறை ஆணையர் அலுவலகம் எங்கே? தரங்கம்பாடி சாலையில் இருக்கும் ஆர்.டி.ஓ. அலுவலக பங்களாவில்தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இருக்கிறது. வேளாண் விரிவாக்க மையத்தில்தான் எஸ்.பி. அலுவலகம் இருக்கிறது. இதுதான் புதிய மாவட்டமா?

மயிலாடுதுறை என்ற புதிய மாவட்டம் உதயமாகும் இந்த நாளில் நகரில் உள்ள பாதாளச் சாக்கடை உடைந்து முக்கியப் பகுதிகளில் சாக்கடை ஓடுகிறது என்று பொதுமக்கள் சொல்கிறார்கள். இதுதான் ஒரு மாவட்டத் தலைநகரத்தின் லட்சணமா? புதிய மாவட்டம் உதயமானால், அதற்கான உள்கட்டமைப்பு வசதி செய்து தரப்பட வேண்டாமா? சும்மா பேர் வைத்தால் போதுமா?

'பேர் வைத்தாயே? சோறு வைத்தாயா?' என்று கேட்பார்கள். அதுபோல ஒரு முதல்வர் நடந்து கொள்ளலாமா? நேற்றைய தினம் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர், இதுவரை நான் எழுப்பிய கேள்விகளுக்கு ஏதாவது பதில் சொல்லி இருக்கிறாரா? என்று பார்த்தேன். எந்தப் பதிலும் சொல்லவில்லை. அவரால் சொல்ல முடிந்தால்தானே சொல்வார்?”

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

SCROLL FOR NEXT