பாலக்கரை எடத்தெருவில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக இளைஞரணி மாநிலச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் |  படம்: ஜி.ஞானவேல்முருகன். 
தமிழகம்

அதிமுக அரசின் ஊழல்களை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை: உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஜெ.ஞானசேகர்

அதிமுக அரசு பல்வேறு ஊழல்களில் ஈடுபடுவதாகவும், ஆனால், மத்திய அரசு அவற்றைக் கண்டுகொள்ளவில்லை என்றும் திமுக இளைஞரணி மாநிலச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் திமுக இளைஞரணி மாநிலச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். திருச்சி மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்குப் பல்வேறு இடங்களிலும் திமுகவினர் சிறப்பான வரவேற்பை அளித்தனர்

இதன்படி, திமுக திருச்சி தெற்கு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உதயநிதி இன்று பிரச்சாரம் செய்தார்.

டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உதயநிதி பேசியதாவது:

"ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வராகப் பதவியேற்ற பழனிசாமி, தமிழ்நாட்டுக்கு ஒன்றுமே செய்யவில்லை. சாலை அமைக்க டெண்டர் விட்டதில் ரூ.6,000 கோடியும், எல்இடி பல்பு பொருத்துவதில் ரூ.700 கோடியும் எனப் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், இவற்றையெல்லாம் மத்திய பாஜக அரசு கண்டுகொள்ளவில்லை.

அதிமுக அமைச்சர்களின் ஊழல்கள் குறித்துக் கடந்த 4 நாட்களுக்கு முன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 27 பக்கப் புகாரை தமிழ்நாடு ஆளுநரைச் சந்தித்துக் கொடுத்துள்ளார்.

கஜா புயல் பாதிப்பு நிவாரணமாக ரூ.15,000 கோடியை மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கேட்ட நிலையில், மத்திய அரசோ ரூ.1,500 கோடி மட்டுமே தந்தது. ஆனால், நல்ல நிலையில் உள்ள நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு ரூ.10,000 கோடியில் புதிய கட்டிடம் கட்டவுள்ளனர். பிரதமர் மோடி சுற்றுப் பயணம் செல்வதற்காக ரூ.7,000 கோடியில் 2 சொகுசு விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன.

முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்து 4 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர் எதனால் உயிரிழந்தார் என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து விசாரித்து, உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

வேளாண் சட்டங்களைத் திமுகவினர் உட்பட அனைவரும் எதிர்க்கின்றனர். ஆனால், அந்தச் சட்டங்களால் எந்த பாதிப்பும் இல்லை என்கிறார் முதல்வர் பழனிசாமி. இதேபோல், நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை எனத் தமிழ்நாட்டின் உரிமைகளை அதிமுக அரசு தாரை வார்த்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

மக்களவைத் தேர்தலைப் போல் சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நல்ல கூட்டணியை அமைப்பார். 234 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும்."

இவ்வாறு உதயநிதி பேசினார்.

முன்னதாக, மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம், மல்லிகைப்பட்டி சமத்துவபுரத்தில் நடைபெற்ற கிராம மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, "தேர்தலின்போது வாக்குக் கேட்டு வரும் அதிமுகவினரிடம் ஜெயலிலதா எதனால், எப்படி உயிரிழந்தார் என்று கேள்வி கேளுங்கள்.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகப் புகார் கூறிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதுகுறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷனில் இதுவரை ஒருமுறைகூட ஆஜராகவில்லை.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் வேலை நாட்களை 150 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

பிரச்சாரத்தின்போது திமுக திருச்சி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்எல்ஏ உடனிருந்தார்.

SCROLL FOR NEXT