விபத்தில் சிக்கிய 2 கார்கள். 
தமிழகம்

ஆம்பூர் அருகே லாரி மீது கார் மோதியது: சென்னையைச் சேர்ந்த கணினி பொறியாளர்கள் இருவர் உயிரிழப்பு- பெண் உட்பட 3 பேர் படுகாயம்

ந. சரவணன்

ஆம்பூர் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் சென்னையைச் சேர்ந்த கணினி பொறியாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர். ஒரு பெண் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்துக் காவல் துறையினர் கூறியதாவது:

’’சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் யோகராஜ் (28), இவரது நெருங்கிய நண்பர் கோகுல் (28). இவர்கள் இருவரும் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் கணினி பொறியாளர்களாகப் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், பெங்களூருவில் வசித்து வரும் யோகராஜின் நண்பருக்குச் சமீபத்தில் குழந்தை பிறந்தது.

குழந்தையைக் காண யோகராஜ் தன் மனைவி திவ்யா (24), நண்பர்கள் கோகுல், ராகவேந்திரன் (29), விகாஷ் (27) ஆகியோருடன் காரில் பெங்களூருவுக்கு நேற்று முன்தினம் சென்றார். பிறகு அங்கிருந்து மீண்டும் சென்னைக்கு 5 பேரும் காரில் திரும்பினர். காரை விகாஷ் ஓட்டி வந்தார்.

நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு அருகே வந்தபோது முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றபோது எதிர்பாராதவிதமாக லாரியின் பின்பக்கமாகக் கார் மோதியது. அடுத்தடுத்து வந்த 2 கார்களும் யோகராஜ் கார் மீது மோதி விபத்துக்குள்ளாயின.

விபத்தில் உயிரிழந்த யோகராஜ், கோகுல் (அடுத்தபடம்)

இதில், யோகராஜ், கோகுல் உட்பட 5 பேரும் படு காயமடைந்தனர். உடனே, அந்த வழியாகச் சென்றவர்கள் விபத்தில் காயமடைந்த 5 பேரையும் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி யோகராஜ் உயிரிழந்தார்.

இதையடுத்து, கோகுல், திவ்யா, விகாஷ், ராகவேந்திரன் ஆகிய 4 பேரும் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோகுல் உயிரிழந்தார். மற்ற 3 பேரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்’’.

இவ்வாறு காவல் துறையினர் தெரிவித்தனர்.

விபத்து குறித்து ஆம்பூர் தாலுக்கா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தினால் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT