தமிழகம்

ஏ.ஆர்.ரஹ்மான் தாயார் மறைவு: ஸ்டாலின் இரங்கல்

செய்திப்பிரிவு

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் (73) உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார். இந்தியத் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் குறிப்பிடத்தக்கவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஹாலிவுட் படங்களுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 2 ஆஸ்கர் விருதுகளை வென்றவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஆரம்பக் காலத்தில் இளம் வயதில் தந்தையை இழந்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அனைத்துமே தாயார் கரீமா பேகம்தான்.

9 வயதில் தந்தை ஆர்.கே.சேகர் மறைந்தபின் அந்தத் துயரம் தெரியாமல் ஏ.ஆர்.ரஹ்மானை வளர்த்து மிகப்பெரும் இசைக்கலைஞனாக உருவாகக் காரணமாக இருந்தவர் அவரது தாயார். தன் தாயார் மீது ரஹ்மானுக்கு மிகுந்த அன்பு உண்டு. மகனைச் சான்றோன் எனக் கற்றவர் சபையில் உருவாக்கிய மகிழ்ச்சியான தருணங்களைக் கண்ட அவரது தாயாரின் முயற்சி குறித்து ஏ.ஆர்.ரஹ்மானின் பல பேட்டிகளில் எப்போதும் குறிப்பிடுவதுண்டு.

சமீபகாலமாக ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா பேகத்துக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் பின்னர் வீட்டில் தங்கி சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் இன்று அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது.

அம்மாவின் மறைவுக்கு ஏ.ஆர்.ரஹ்மானுக்குப் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் மறைவுச் செய்தி கேட்டு திமுக தலைவர் ஸ்டாலின் ரஹ்மான் குடும்பத்திற்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட இரங்கல் செய்தி:

“இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.
தமிழில் தொடங்கிப் பல மொழிகளிலும் இசையமைப்பில் உச்சம் தொட்டு ஆஸ்கர் வரை உலகப் புகழினைப் பெற்றிடும் வகையில் ரஹ்மானை ஆளாக்கியதில் பெரும்பங்கு வகித்தவர் அம்மையார்.

தாயின் இழப்பில் துயர் அடைந்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆறுதல்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT