சொத்துகளை அபகரித்துவிட்டதாகக் கூறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று 4 மூதாட்டிகள் மண்ணெண்ணையை ஊற்றித் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கோவை அன்னூரை அடுத்த குப்பனூரைச் சேர்ந்தவர் முருகம்மாள் (97). இவருக்கு மாரக்காள் (75), லட்சுமி (70), பாப்பாத்தி (65) என்ற மூன்று மகள்கள் உள்ளனர். தவிர ரங்கசாமி (55) என்ற மகனும் இருந்தார்.
அதேபகுதியில் முருகம்மாளுக்கு 12 ஏக்கரில் இடம் இருந்தது. இதனை ரங்கசாமி ஏமாற்றி எழுதி வாங்கியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இந்தச் சூழலில், ரங்கசாமி உயிரிழந்து விடவே, அவரது மனைவியான பாப்பாத்தி (மற்றொருவர்) என்பவர் முருகம்மாளைத் துன்புறுத்துவதாகவும், இடத்தைக் கொடுக்க முடியாது என்று கூறியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, முருகம்மாள் கடந்த ஓராண்டாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வந்துள்ளார். இதுகுறித்து நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாத நிலையில், முருகம்மாள் மற்றும் அவரது மகள்கள் மாரக்காள், லட்சுமி மற்றும் பாப்பாத்தி ஆகிய நான்கு பேரும் இன்று (28-ம் தேதி) காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். வளாகத்தின் முன்புறம் நின்று, மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை ஊற்றித் தீக்குளித்து, தற்கொலைக்கு முயன்றனர்.
இதனைப் பார்த்த போலீஸார், மூதாட்டிகள் மீது தண்ணீரை ஊற்றி அவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர வைத்தனர். பின்னர் பாப்பாத்தி மட்டும் ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக மனு அளித்தார். இச்சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.