தமிழகம்

முகநூலில் அறிமுகமான சிறுமியை ரயிலில் அழைத்துச் சென்ற பொறியியல் மாணவர் கைது: விரைந்து துப்பு துலக்கிய போலீஸாருக்கு பாராட்டு

செய்திப்பிரிவு

முகநூலில் அறிமுகமான 13 வயது சிறுமியை ரயிலில் அழைத்துச் சென்ற பொறியியல் மாணவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை கோட்டூர்புரம் பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமி தனது சித்தியின் 8 வயதுமகளுடன் சேர்ந்து நேற்று முன்தினம் வெளியே சென்றிருந்தார். இரவு 10 மணி ஆகியும் வீடு திரும்பாததால், அவரது தந்தை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். சைபர் கிரைம் போலீஸார் உதவியுடனும் துப்பு துலக்கப்பட்டது.

சைபர் கிரைம் போலீஸார் உரிய தொழில்நுட்ப வசதியுடன் சிறுமியின் செல்போன் தொடர்பு விவரங்களை கண்காணித்ததில், சிறுமிகள் பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து ரயிலில் சென்றது தெரியவந்தது. காவல் கட்டுப்பாட்டு அறை, ரயில்வே போலீஸார் மட்டுமின்றி பல்வேறு வாட்ஸ்-அப் குழுக்களுக்கும் சிறுமிகளின் புகைப்படம், விவரங்களை உடனடியாக அனுப்பி, தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர்.

பெற்றோரிடம் ஒப்படைப்பு

இந்நிலையில், விழுப்புரம் அருகே சிறப்பு விரைவு ரயிலில் 2 சிறுமிகள் தனியாக பயணிப்பதை பார்த்த திருநங்கை ஒருவர் காவல் துறைக்கு தகவல் கொடுத்தார்.

இத்தகவல் கோட்டூர்புரம் போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக ரயில்வே போலீஸார் மற்றும் ரயிலில் பணியில் இருந்த டிக்கெட் பரிசோதகர்களை தொடர்பு கொண்டு, 2 குழந்தைகளையும் விழுப்புரம் ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைக்கும்படி கூறினர். அதன்படி, ரயிலில் இருந்து 2 சிறுமிகளையும் விழுப்புரம் ரயில்வே போலீஸார் மீட்டனர். கோட்டூர்புரம் போலீஸார் விழுப்புரம் சென்று 2 சிறுமிகளையும் சென்னைக்கு அழைத்து வந்து, பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.

போலீஸார் விசாரணை

காணாமல்போன சிறுமிக்கு முகநூலில், சென்னையில் வசிக்கும் பொறியியல் மாணவர்ஒருவர் அறிமுகமாகி உள்ளார். அவர் தனது சொந்த ஊரான வில்லிபுத்தூருக்கு சென்றபோது, 2 சிறுமிகளும் உடன் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அந்த பொறியியல் மாணவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

புகார் கொடுத்த 6 மணி நேரத்தில் சிறுமிகளை மீட்ட போலீஸாருக்கு சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டு தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT