செங்கல்பட்டு நகராட்சி கோகுலபுரம் கம்பர் தெருவில் உள்ள குடிநீர் தொட்டி. 
தமிழகம்

செங்கை நகராட்சி ரூ. 1.5 கோடி மின் கட்டணம் பாக்கி: சிறுமின்விசை குடிநீர் தொட்டிக்கு மின் இணைப்பு வழங்க வாரியம் மறுப்பு

செய்திப்பிரிவு

செங்கல்பட்டு நகராட்சி 27-வதுவார்டு கோகுலபுரம் கம்பர் தெருவில் குடிநீர் வசதிக்காக, ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட,குடிநீர்த் தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் ஏற்ற ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. காஞ்சி நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 3.5 லட்சம் மதிப்பீட்டில் மார்ச் மாதம் முன்பு பணிகள் முடிக்கப்பட்டன.

இதையடுத்து மின் இணைப்பு கேட்டு மின் வாரியத்துக்கு நகராட்சி பெயரில் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. ஆனால் நகராட்சி நிர்வாகம் ஏற்கெனவே ரூ.1.5 கோடி மின் பாக்கி வைத்திருப்பதால் புதிய மின் இணைப்பு வழங்க மின்வாரியம் மறுத்து விட்டது. இதனால்அது பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. இதை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: இப்பகுதி மக்களின் பயன்பாட்டுக்காக சிறு மின் விசை பம்புடன் கூடிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இங்கு வசிக்கும் பலரது வீடுகளில் குடிநீர் இணைப்பு இல்லாததால், கடந்த, ஆறு மாத காலமாக இந்த குடிநீர்தொட்டியில் தண்ணீர் நிரப்பப்படாமல் உள்ளதால், குடிநீருக்காக அடுத்த தெருவுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. நகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அவர்கள் மவுனமாகவே உள்ளனர். அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

இதுகுறித்து செங்கல்பட்டு நகராட்சி ஆணையர் ஜி.ராஜலட்சுமி கூறும்போது, “நகராட்சி சார்பில் ரூ.1.5 கோடி மின்வாரியத்துக்கு செலுத்த வேண்டும். இந்த தொகையை செலுத்தினால் மட்டுமே புதிய இணைப்பு வழங்கமுடியும் என மின்வாரியம் தெரிவித்து விட்டது. இதுகுறித்து அரசின்கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். விரைவில் தீர்வு ஏற்படும் என நம்புகிறோம்” என்றார்.

இதுகுறித்து மின்வாரியத்தினர் கூறியதாவது: உள்ளாட்சி அமைப்புகள் கட்டண பாக்கி வைத்திருந்தால் அதை செலுத்திய பிறகுதான் புதிய இணைப்பு வழங்க வேண்டும் எனவாரியம் அறிவுறுத்தியது. அதனால்தான் செங்கல்பட்டு நகராட்சி நிர்வாகத்துக்கு புதிய இணைப்பு வழங்கப்படவில்லை. அவர்கள் செலுத்த வேண்டிய பழைய பாக்கியை செலுத்தினால் புதிய இணைப்பு வழங்கப்படும் என்றனர்.

SCROLL FOR NEXT