சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவில் பிற மாவட்ட பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும் என, கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் டிசம்பர் 30-ம் தேதி வருவதையடுத்து சிதம்பரம் நடராஜர் கோயிலில் டிசம்பர் 28-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை மார்கழி ஆருத்ரா தரிசன மகோத்சவம் நடைபெற உள்ளது. ஆனால், இந்த உற்சவத்தில் கடலூர் மாவட்டம் தவிர, பிற மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதியில்லை என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இது சம்பந்தமாக டிசம்பர் 21-ம் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி காஞ்சிபுரத்தைச் சேர்ந்த விஷ்ணுதாஸ் என்பவர் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
அவரது மனுவில், ''பிற மாவட்ட பக்தர்களுக்கு ஒட்டுமொத்தமாகத் தடை விதிப்பதற்கு பதில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உதவியுடன் தனி மனித விலகல் நடைமுறைகளைப் பின்பற்றி கூட்டத்தை முறைப்படுத்துவது குறித்துப் பரிசீலிக்கலாம்.
ஏற்கெனவே பிற மாவட்டங்களுக்குப் பயணிக்க பின்பற்றப்பட்ட இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாலும், ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாலும், பிற மாவட்ட மற்றும் பிற மாநில பக்தர்களுக்கு தனி மனித விலகல் உள்ளிட்ட விதிகளைப் பின்பற்றி ஆருத்ரா தரிசன மகோத்சவ நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும்'' எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வில் அவசர வழக்காக டிசம்பர் 25-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மனு குறித்து விளக்கம் அளிக்க அரசுத் தரப்பில் அவகாசம் அளித்து இன்று ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
இன்று விசாரணைக்கு எடுத்துக் கொளளப்பட்டபோது, மனுதாரர் தரப்பில், “பிற மாவட்ட பக்தர்களுக்கு ஒட்டுமொத்தமாகத் தடை விதிப்பதற்கு பதில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உதவியுடன் தனி மனித விலகல் நடைமுறைகளைப் பின்பற்றி கூட்டத்தை முறைப்படுத்துவது குறித்துப் பரிசீலிக்கலாம்.
ஏற்கெனவே பிற மாவட்டங்களுக்குப் பயணிக்க பின்பற்றப்பட்ட இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாலும், ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாலும், பிற மாவட்ட மற்றும் பிற மாநில பக்தர்களுக்கு தனி மனித விலகல் உள்ளிட்ட விதிகளைப் பின்பற்றி ஆருத்ரா தரிசன மகோத்சவ நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும்” என வாதிடப்பட்டது.
தமிழக அரசுத் தரப்பில், கரோனா பரவல் சூழலைக் கருத்தில் கொண்டு பக்தர்களின் பாதுகாப்புக்காகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், பக்தர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கம் ஏதும் அரசுக்கு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மாநிலங்களுக்கு இடையிலும், மாநிலத்திற்குள்ளும் மக்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், மத விவகாரங்களில் காரணமற்ற கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது எனக் கூறி, சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெற உள்ள ஆருத்ரா தரிசனத்திற்கு அனைத்து பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும், மாவட்ட ஆட்சியரின் கடிதத்தில் கூறியுள்ளபடி, பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரையும், 4.30 மணி முதல் 5.30 மணி வரையும், 6 முதல் 7 மணி வரையும் தலா 200 பக்தர்கள் வீதம் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனுமதிக்க வேண்டும் எனவும், பக்தர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், வெப்பநிலை அதிகமாக இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தி, கரோனா அறிகுறி இல்லாவிட்டால் அனுமதி வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அனைத்து பக்தர்களும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், கரோனா பரிசோதனை சான்று கட்டாயமில்லை என்றும் குறிப்பிட்ட நீதிபதிகள், திறந்த வெளியில் 50 சதவீதம் பேர் கூட அனுமதியளித்த மத்திய அரசின் உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.