தமிழகம்

மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்: சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த்

செய்திப்பிரிவு

மருத்துவமனையிலிருந்து ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், தனி விமானம் மூலம் சென்னை திரும்பவுள்ளார்.

'அண்ணாத்த' படப்பிடிப்பில் கரோனா தொற்று பரவியதைத் தொடர்ந்து, படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அப்போது ரஜினிக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கரோனா நெகட்டிவ் என்று உறுதி செய்யப்பட்டாலும், தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.

டிசம்பர் 25-ம் தேதி ரஜினிக்கு திடீரென்று ரத்த அழுத்த மாற்றம் ஏற்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ரஜினிக்குப் பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் பயப்படும்படி எதுவும் இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இன்று (டிசம்பர் 27) மாலை மருத்துவமனையிலிருந்து ரஜினி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஹைதராபாத்திலேயே தங்கிவிட்டு, சில நாட்கள் கழித்துதான் ரஜினி சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரஜினியோ உடனடியாக சென்னை திரும்புகிறார்.

தற்போது பகம்பேட் விமான நிலையத்துக்குச் சென்றுள்ளார் ரஜினி. அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்புகிறார். இரவு 7:45 மணியளவில் அவர் சென்னைக்கு வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை திரும்பும் ரஜினி, டிசம்பர் 31-ம் தேதி கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவாரா அல்லது சில நாட்கள் ஒத்திவைப்பாரா என்பது விரைவில் தெரியவரும்.

SCROLL FOR NEXT