தமிழகம்

திருவான்மியூரில் ரூ.2.75 மதிப்புள்ள கொக்கைன் போதை பவுடருடன் நைஜீரிய இளைஞர் கைது

செய்திப்பிரிவு

திருவான்மியூர் பகுதியில் கொக்கைன் போதைப்பொருளைக் கடத்திய நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நபர் போலீஸாரிடம் சிக்கினார். அவரிடமிருந்து ரூ.2.75 லட்சம் மதிப்புள்ள 55 கிராம் கொக்கைன் போதைப்பொருள், ரொக்கப் பணம் ரூ.65,000/- மற்றும் 1 செல்போனைப் பறிமுதல் செய்தனர்.

சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை" (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டதின் பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான போலீஸார் தீவிரமாகக் கண்காணித்து, கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் திருவான்மியூர் காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் வசந்தராஜ், ராஜகோபால், முதல்நிலைக் காவலர் செல்வம் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், திருவான்மியூர், இசிஆர் பேருந்து நிறுத்தம் அருகே கண்காணிப்புப் பணியிலிருந்தனர்.

அப்போது, அங்கு நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தார். அவரைப் பிடித்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அப்போது, அதில் கொக்கைன் என்ற போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. உடனடியாக அவரைக் கைது செய்த போலீஸார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

போலீஸார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபர் பெயர் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஆரிப் (46) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 55 கிராம் கொக்கைன் கைப்பற்றப்பட்டது. அதன் சந்தை மதிப்பு ரூ.2.75 லட்சம் ஆகும். இதுதவிர ரொக்கப் பணம் ரூ.65,000, மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஆரிப் மும்பையிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்து, சென்னையிலிருந்து புதுச்சேரி செல்வதற்காக திருவான்மியூர் பேருந்து நிறுத்தத்தில் நின்றது தெரியவந்தது.

விசாரணைக்குப் பின்னர், கைது செய்யப்பட்ட குற்றவாளி ஆரிப் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT