கோவை அருகே கொள்ளையர்கள் நடுரோட்டில் விட்டுச்சென்ற காரில் ரூ.1 கோடி ஹவாலா பணம் சிக்கியது. இதுகுறித்து ரியல் எஸ்டேட் அதிபரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்தவர் அப்துல் சலாம் (50). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். தனது கார் ஓட்டுநரான சம்சுதீன் (42) உடன் பெங்களூரில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்கு கடந்த 25-ம் தேதி சென்றபோது நவக்கரை அருகே இரண்டு கார்களில் வந்த மர்ம கும்பல் அப்துல் சலாமைக் கத்தி முனையில் மிரட்டி கார் மற்றும் ரூ.27 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றது. சம்பவம் தொடர்பாக க.க.சாவடி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் அப்துல் சலாமின் கார், கோவை சிறுவாணி சாலை மாதம்பட்டி அருகே நேற்று முன்தினம் மீட்கப்பட்டது. தடயவியல் துறையினர் காரில் பதிவான கைரேகைகளைப் பதிவு செய்தனர். பச்சாபாளையம் அருகே அப்துல் சலாம், சம்சுதீன் ஆகியோரின் செல்போன்கள் கண்டெடுக்கப்பட்டன. மாதம்பட்டியில் பறிமுதல் செய்த காரை தனிப்படை போலீசார் க.க.சாவடி காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர்.
காரைச் சோதனையிட்டபோது, காரின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. மேலும் காரின் பின் இருக்கைப் பகுதிக்கு அடியில் ரகசிய அறைகள் இருந்ததும், ரகசிய அறையில் கட்டுக்கட்டாக மொத்தம் ரூ.90 லட்சம் பணம் இருந்ததும் தெரியவந்தது. அந்தப் பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அப்துல் சலாமிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
காரில் மொத்தம் எவ்வளவு ஹவாலா பணம் இருந்தது. மர்ம கும்பல் ஏதேனும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றதா என விசாரணை தீவிரமடைந்துள்ளது. தனிப்படை போலீஸார் கொள்ளை கும்பலைப் பிடிக்க கேரளாவில் முகாமிட்டுள்ளனர்.