எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஐனநாயகக் கூட்டணி சார்பில் முதல்வர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்படுபவர் அரியணை ஏறுவார் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
பாஜக அணி மற்றும் பிரிவு நிர்வாகிகள் மாநாடு இன்று கள்ளக்குறிச்சியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தடா பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் பேசுகையில், ''இங்கு கூடியிருப்போர், மாநாடு முடிந்ததும், தங்களது வீட்டிற்குச் சென்று வீடுகளில் பாஜக கொடியேற்றி அதனை சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
விவசாய திருத்தச் சட்டங்கள் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த பிரதமர் மோடி உறுதிப்படுத்தியுள்ளார். இதன் மூலம் கமிஷன் கிடைக்காமல் போய்விடும் என்ற அச்சத்தின் காரணமாகவே திமுக, காங்கிரஸ் கட்சிகள் விவசாய திருத்தச் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நமது கட்சியின் உறுப்பினர்கள் சட்டப்பேரவையை அலங்கரிப்பார்கள். அதில் கள்ளக்குறிச்சி மாவட்டமும் அடங்கும். அதேபோன்று சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் முதல்வர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்படுபவர் அரியணை ஏறுவார்'' என்று தெரிவித்தார்.