சனீஸ்வர பகவான் இன்று தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு காலை 5.22க்குப் பெயர்ச்சி அடைந்தார். இதனையொட்டி சனீஸ்வர பகவான் எழுந்தருளியுள்ள விழுப்புரம் மாவட்டக் கோயில்களில் பக்தர்கள் குவிந்தனர்.
சனீஸ்வரனை வழிபட்டு அவரது அருளைப் பெற்றவர்கள் வாழ்வில் உயர்ந்தும், சிறந்தும் விளங்குவர் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. இந்தியாவெங்கும் பல சனீஸ்வர ஆலயங்கள் இருந்தாலும், விழுப்புரம் அருகே அன்னியூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு திரிபுர சுந்தரி சமேத ராமநாததீஸ்வரர் திருக்கோயிலில் உள்ள நவகிரகத்தில் வீற்றிருக்கும் சங்கடத்தை தீர்க்கும் சனிபகவான் வாகனமான காக்கையின் மீது வலது காலை ஊன்றி எழுந்து புறப்படும் கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
‘என்னை மனம் நிறைந்து வேண்டி அழைக்கும் பக்தர்களுக்கு உடனே புறப்பட்டு வந்து உதவத் தயாராக இருக்கிறேன்’என்ற திருக்கோலத்தில் பகவான் காட்சியளிக்கிறார்.
இக்கோயிலில் இன்று அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இக்கோயிலில் குவிந்த பக்தர்கள் எள் நிரப்பிய சிறிய துணிகளுடன் நல்லெண்ணெய் ஊற்றி 9 அகல் விளக்குகளை ஏற்றி வழிபட்டனர். அப்போது திட்ட அலுவலர் மகேந்திரன், விக்கிரவாண்டி எம்எல்ஏ முத்தமிழ்ச்செல்வன், தனிப்பிரிவு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, திமுக் மாநில விவசாய அணி துணைச் செயலாளர் அன்னியூர் சிவா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முற்கால பல்லவர் காலத்துக் கோயில் என்றும், தற்போது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் கோயிலின் வசந்த மண்டபம் சிதிலமடைந்து காணப்படுகிறது.
இதேபோல கல்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீ யோக சனீஸ்வரர் கோயில், கோலியனூர் வாலீஸ்வரர் கோயில், மொரட்டாண்டி விஸ்வரூப மகா சனீஸ்வரர் கோயில்களில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.