தமிழகம்

புதுச்சேரி மாநிலம் முழுவதும் பிஆர்டிசி ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு  

அ.முன்னடியான்

புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகத்தைத் தனியார் மயமாக்குவதைக் கண்டித்து பிஆர்டிசி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நாளை (டிச.28) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்துக் கழகத்தின் (பிஆர்டிசி) சார்பில் திருப்பதி, சென்னை, பெங்களூரு, குமுளி, நாகர்கோவில், மாஹே, வேளாங்கண்ணி, காரைக்கால், நாகை போன்ற முக்கிய நகரங்களுக்கு விரைவுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. குறித்த நேரம், வேகம் ஆகிய காரணங்களால் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

குறிப்பாக உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு என 140 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் பிஆர்டிசியில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட 750க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதனிடையே விரைவுப் பேருந்துகளைத் தனியார் மயமாக்க அரசு முயன்று வருகிறது. இது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனைக் கண்டித்தும், இந்த முயற்சியைக் கைவிட வலியுறுத்தியும் கடந்த வாரம் புதுச்சேரியில் பிஆர்டிசி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பிஆர்டிசி தனியார் மயமாக்குவதைக் கண்டித்து பிஆர்டிசி அனைத்துத் தொழிற்சங்கங்கள் சார்பில் நாளை (டிச.28) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்துப் பிரிவு ஊழியர்களும் பங்கேற்க உள்ளனர்.

இதுகுறித்து புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழக அனைத்து தொழிற்சங்கங்களின் அனைத்துப் பிரிவு ஊழியர்கள் சார்பில் கூறுகையில், ‘‘பிஆர்டிசி தனியார் மயமாக்குவதைக் கண்டித்து பிஆர்டிசி அனைத்துத் தொழிற்சங்கங்கள் சார்பில் நாளை திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்.

டாக்டர் அம்பேத்கர் தொழிற்சங்கம், பிஎம்எஸ் தொழிற்சங்கம், என்.ஆர்.தொழிற்சங்கம், அண்ணா தொழிற்சங்கம், அரசு ஊழியர் சம்மேளனம், அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பு, புமகா தொழிற்சங்கம், மக்கள் தொழிலாளர் நலச்சங்கம் ஆகியவை பங்கேற்பதாக அறிவித்துள்ளன. புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் சேர்த்து மாநிலம் முழுவதும் பிஆர்டிசி ஊழியர்கள் போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர்’’எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT