வரும் சட்டசபைத் தேர்தலுக்காக தேனி மாவட்டத்தில் உள்ள பல கட்சிகள் சமூகவலைதளங்களில் முகமூடி முகவரி களுடன் களத்தில் குதித்துள்ளன. இவர்களின் வரம்பு மீறிய பதிவுகளால் வாக்குவாதம், மிரட்டல் என்று சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
அதிமுக அரசின் பதவிக்காலம் விரைவில் நிறைவடைய உள்ள நிலையில் அடுத்த ஆண்டு மே மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு கட்சிகளும் தற்போது பிரச்சாரங்களை துவக்கி உள்ளன. விடியலை நோக்கி ஸ்டாலின்குரல் என்ற பெயரில் சில வாரங்களுக்கு முன்பே எம்பி.திருச்சி சிவா போடிநாயக்கனூர், பெரியகுளம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் விவசாய, வர்த்தக சங்க நிர்வாகி களைச் சந்தித்துப் பேசினார்.
அதிமுக.வைப் பொறுத்தளவில் வாக் காளர்பட்டியல் திருத்த பணியில் இருந்தே கீழ்மட்ட அளவில் வேலைகளைத் துவக்கிவிட்டனர். மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள நீண்டநாள் பிரச்சினைகள், அதிருப்தி வாக்காளர்கள் உள்ளிட்டவற்றை கணக்கெடுத்து வருகின்றனர். ஏற்கெனவே மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆண்டிபட்டி, தேனி, பெரியகுளம் உள்ளிட்ட தேர்தல் பிரசார பயணங்களை மேற்கொண்டார்.
தற்போது தொழில்நுட்பவளர்ச்சியால் சமூகவலைதளங்களின் ஈர்ப்பு வெகுவாய் அதிகரித்து விட்டது. பெரும்பாலானோர் இதிலே பல மணி நேரங்களை செலவழித்து வருகின்
றனர். அதையும் பிரசார களமாக கட்சிகள் பயன்படுத்தத் துவங்கி உள்ளன. ஒவ்வொரு கட்சியும் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு பெயர்களில் கணக்குகளைத் துவங்கி கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றன.
தாங்கள் செய்யப்போகும் பணியை தெரிவிப்பதுடன் எதிர்தரப்பை குற்றம் சாட்டுவதில் துவங்கி, கேலிக்கூத்தாக சித்திகரிப்பது, கட்சி தலைவர்களின் பேச்சு, வீடியோக்
களை வெட்டி, ஒட்டி வரம்பு மீறிய செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். கட்சிமீதான இமேஜை உடைக்கவும், நடுநிலை வாக்காளர்களின் கவனத்தை திருப்பவும் பல கட்சிகள் அதீத விமர்சனங்களையும், வதந்தி பரப் பலையும் கையில் எடுக்கத் துவங்கி உள்ளனர்.
இதுபோன்ற தொடர் செயல்பாடுகளால் சமூகவலைதளங்களின் ஒருபகுதி வாக்குவாதம், கடினமான வார்த்தை பிரயோகம், மிரட்டல் என்று தரம்தாழ்ந்து சென்று கொண்டிருக்கிறது. தேர்தல் ஆணையம் பிரசாரத்திற்கு சுவரொட்டி தடை, வாகன கட்டுப்பாடு, நேர நிர்ணயம் என்று பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில் 24 மணி நேரமும் திறந்த வெளியாக கிடக்கும் சமூகவலைதள களத்தையே இந்த தேர்தலில் பல கட்சிகளும் பிரதானமாக முன்னெடுக்க உள்ளது. ஆனால் இதற்கான கட்டுப்பாடோ கண்காணிப்போ பெரியளவில் இல்லாததால் வரைமுறை மீறிய பதிவுகள் பலரையும் முகம் சுழிக்கவே வைக்கிறது. எனவே இவற்றை முறைப்படுத்த வேண்டும் சமூக ஆர்வலர்களும், நடுநிலை வாக்காளர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.