திண்டுக்கல், பழநி எங்கள் கோட்டை, இந்த தொகுதிகளில் எங்களுக்கு செல்வாக்கு அதிகம் இருக்கிறது என பா.ஜ.க,-வினர் கூறிவந்த நிலையில், ‘திண்டுக்கல் தொகுதியை நமதாக்கு வோம்’, என ஆலோசனைக் கூட்டம் நடத்தியது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் ‘திண்டுக்கல் தொகுதியை நமதாக்குவோம்’ என்ற தலைப்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பா.ஜ.க, மாநில துணைத்தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
எங்கள் மாவட்ட தலைவர்கள் என்ன போட்டியிட தகுதியில்லாதவர்களா, கட்சியை வளர்க்கத்தான் முதலில் பாடுபடுகிறோம். கூட்டணியெல்லாம் பிறகுதான் என பேசியவர், திண்டுக்கல், பழநி எங்கள் கோட்டை, இளைஞர்கள் எங்கள் கட்சியில்தான் அதிகம் இருக்கின்றனர், என்றார்.
அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தொகுதி திண்டுக்கல் என நினைவுபடுத்தியபோதும், முதலில் கட்சி வளர்ச்சிதான் முக்கியம். பிறகுதான் கூட்டணி. கூட்டணி பேச்சுவார்த்தையில் கட்சி என்ன முடிவெடுக்கிறதோ அப்போது பார்க்கலாம், என தெரிவித்தார்.
கடந்த மாதம் பழநியில் நடந்த வேல்யாத்திரை பொதுக்கூட்டத்தின் போது பா.ஜ.க மாநில துணைத்தலைவர் அண்ணாமலை, பழநி தொகுதியில் பாரதிய ஜனதா போட்டியிட விரும்புகிறது என தனது கருத்தை தெரிவித்தார். சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் நடந்த கூட்டத்தில் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியை நமதாக்குவாம் என்ற கோஷத்தை பாரதிய ஜனதா கட்சியினர் முன்வைத்துள்ளனர்.
அதிமுகவினர் அதிர்ச்சி
பழநி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து பேசியபோது, ஆன்மீகத்தலம் பழநி என்பதால் பா.ஜ.க, போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது போல, என கூட்டணிக்காக ஒரு இடம் விட்டுக்கொடுக்க வாய்ப்புள்ளது என்றே அதிமுகவினர் சாதாரணமாக எடுத்துக் கொண்டனர்.
ஆனால் தற்போது திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியை நமதாக்கு வோம் என ஆலோசனைக் கூட்டம் நடத்தியது அதிமுகவினரை அதிர்ச்சிக் குள்ளாகியுள்ளது. திண்டுக்கல் தொகுதி வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தொகுதி என தெரிந்தும், அவர் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ள நிலையில், தனித்து போட்டியிடப்போவதுபோல் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியை நமதாக்குவோம் என பேசுவது என்ன நியாயம் என்கின்றனர் அதிமுகவினர்.