தமிழகம்

வளம் கொழிக்கும் தீவு கிராமங்கள்: அக்கரை ஜெயங்கொண்டப்பட்டினம், திட்டுக்காட்டூர், கீழகுண்டலபாடி

க.ரமேஷ்

சிதம்பரத்தில் இருநது 7 கி.மீ தொலைவில் பழைய கொள்ளிடம் - கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே பசுமையுடன் காட்சியளிக்கும் பெரும் திட்டுப் பகுதியில் 3 கிராமங்கள் இருக்கின்றன. இதுவே ‘தீவு கிராமங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.

இந்த திட்டுப் பகுதியில் அக்கரை ஜெயங்கொண்டப்பட்டினம், திட்டுக் காட்டூர், கீழகுண்டலபாடி என இயற்கை வளம் கொழிக்கும் 3 கிராமங்கள் உள்ளன. சுற்றிலும் பச்சைப் பசேல் வயல் வெளிகள், தென்னந் தோப்புகள் என இயற்கை சூழல் நிறைந்த இந்த மூன்று கிராமங்களிலும் மொத்தமாக 5 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.

அக்கரை ஜெயங்கொண்டப்பட்டினம் கிராமம் கரைப்பகுதியில் உள்ள ஜெயங் கொண்டப்பட்டினம் ஊராட்சியைச் சேர்ந்தது. திட்டுக்காட்டூர் கரை பகுதியில் உள்ள பெராம்பட்டு ஊராட்சியைச் சேர்ந்தது. கீழகுண்டலபாடி கிராமம் வல்லம் படுகை அருகே கரை கிராமான மேல குண்டலபடி ஊராட்சியைச் சேர்ந்தது.

இம்மக்களின் பிரதான தொழில் விவசாயம். கத்திரி, வெண்டை, முருங்கை, புடலை, பீர்க்கை, சோளம், கம்பு, கேழ்வரகு, மணிலா வாழை, கொத்தமல்லி, மலர் சாகுடி, தென்னை என வருமானம் அள்ளித்தரக் கூடிய பயிர் வகைகளை சாகுபடி செய்து வருகின்றனர். ஆடு, மாடுகளை வளர்ப்பதிலும் ஆர்வம் செலுத்துகின்றனர்.

வளம் கொழிக்கும் பகுதியாக இருந்தாலும் இத்தீவு கிராமங்கள் நம் மாவட்டத்தில் தனித்தே நிற்கிறது. இங்கு விளையும் பயிர்களை, இங்குள்ள விவசாயிகள் மார்பளவு தண்ணீரில் இறங்கி பழைய கொள்ளிடம் ஆற்றைக் கடந்து, சிதம்பரம் காய்கறி மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகிறார்கள். மாணவர்களும் பள்ளி, கல்லூரிக்கு இதே போல் சென்று வருகின்றனர்.

பழைய கொள்ளிடக் கரையில் இருக்கும் பெராம்பட்டு கிராமத்துக்கும் தீவு கிராமமான திட்டுக்காட்டூருக்கும் இடையே கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலம்

பெரு மழை காலத்தில் பழைய கொள்ளிடத்திலும், கொள்ளிடம் ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுக்கும். அப்போது இந்த தீவு கிராமங்களுக்குள் வெள்ள நீர் புகுந்து விடும். வருவாய்த்துறையினர் படகுகளில் சென்று, கிராம மக்களை அழைத்தாலும் அவர்கள் கிராமத்தை விட்டு வர மறுத்து விடுவார்கள். அந்த அளவுக்கு மண் பாசம் அவர்களுக்கு. இதனால், அரசு அப்பகுதியில் உள்ள மேடான இடத்தில் புயல் வெள்ளம் பாதுகாப்பு மையங்களை கட்டியது. அடுத்த கரை வரை தரை வழி பாலம் ஒன்றையும் அமைத்தது. அதுவெல்லாம் நிரந்தர தீர்வாய் அமையவில்லை.

ஆற்றில் இறங்கி, மாணவர்கள் மேற்கொள்ளும் ஆபத்தான பயணத் திற்கு முடிவு கட்ட அக்கரை ஜெயங்கொண்டப்பட்டினம் கிராம இளைஞர்கள் முடிவு செய்து, சுமார் 20 ஆயிரம் ரூபாயில் சிறிய மூங்கில் பாலம் ஒன்றை ஒரே நாளில் கட்டியிருக்கின்றனர்.

‘உயர் மட்ட பாலம் வேண்டும்’ என்பதே. இந்தக் கிராமத்தினரின் நீண்ட நாள் கோரிக்கை.

இந்த நிலையில் இந்த தீவு (திட்டு) கிராமங்களை பழைய கொள்ளிடம் ஆற்றின் கரையுடன் இணைக்கும் வகையில், பெராம்பட்டு - திட்டுகாட்டூர் கிராமங்களை இணைக்கும் உயர்மட்ட பாலத்திற்கான பணிகள் சென்ற ஆண்டு தொடங்கப்பட்டு, நடந்து வருகிறது. இதற்காக தமிழ்நாடு அரசின் புவியியல் மற்றும் கனிம அறக்கட்டளை நிதியில் இருந்து ரூ.19.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தீவு கிராம மக்களின் 50 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறப் போகிறது.

இதை தவிர இக்கிராமத்தினர் வைக்கும் மற்றொரு கோரிக்கையும் மிக முக்கியமானது.

“கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் உப்பாக மாறி வருகிறது. குடிநீர் குடிக்கும்படியாக இல்லை. கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைக் கட்டி எங்களின் தாகம் தீர்க்க வேண்டும்” ன்கின்றனர்.

இதற்கும் அரசு முன் முயற்சி எடுத்தால், நம் மாவட்டத்தில் ஒதுங்கி இருக்கும் இந்த தீவு கிராம மக்கள் பயனடைவார்கள்.

SCROLL FOR NEXT