தமிழகம்

சி.வி.சண்முகத்துக்கு வெயிட்! பாமகவுக்கு செக்!

ந.முருகவேல்

கடலூர் மாவட்ட அதிமுகவில் அமைச்சர் சம்பத்துக்கும், அக்கட்சி எம்எல்ஏ-க்களுக்கும் ஏழாம் பொருத்தம் என்பது ஊரறிந்த ரகசியம்.

அதன் எதிரொலி தேர்தல் மண்டல பொறுப்பாளர் வரை எதிரொலிக்கிறது. கடலூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளரும் அமைச்சருமான சம்பத், தனது கட்டுப்பாட்டில் உள்ள கடலூர், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி ஆகிய 3 தொகுதிகளுக்கு மட்டும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேநேரத்தில் கடலூர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்கள் அடங்கிய திட்டக்குடி, விருத்தாசலம், புவனகிரி, சிதம்பரம், பண்ருட்டி, காட்டுமன்னார்கோயில் உள்ளிட்ட 6 தொகுதிகளுக்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுதவிர விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் என மொத்தம் 17 தொகுதிகளுக்கு சி.வி.சண்முகத்தை பொறுப்பாளாராக நியமித்திருக்கிறது அதிமுக தலைமை.

அவரும், கடலூர் மாவட்டத்தில் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி வருகிறார். இப்படி சி.வி.சண்முகத்தை நியமிப்பதன் மூலம் வன்னியர்கள் பெல்ட்டை வளைக்கலாம்; அவரைப் பயன்படுத்தி ‘துணை முதல்வர்’ எனும் பாமக டிமாண்ட்டுக்கு செக் வைக்கலாம் என கணக்குப் போட்டு களமிறங்கியிருக்கிறது அதிமுக.

அதாவது, ‘வன்னியர்கள் தரப்பில் இருந்து ஒருவருக்கு துணை முதல்வர் கொடுக்க எங்கள் கட்சியிலும் வற்புறுத்தல் இருக்கிறது. அதை சி.வி.சண்முகத்துக்கே கொடுத்து சரிகட்ட வேண்டிய நிர்பந்தத்தில் நாங்கள் இருக்கிறோம்’ என்று தேர்தலுக்குப் பின் பாமகவிடம் போக்கு காட்டலாம் என்று அதிமுக திட்டமிட்டிருக்கிறதாம்.

SCROLL FOR NEXT