தமிழக அரசியலில் காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு முறையான வாரிசு இல்லாததால், அவர்கள் தங்கள் அரசியல் வாரிசை அடையாளம் காட்டா மலேயே காலத்தைக் கடந்து சென்று விட்டனர்.
மேற்கண்ட நான்கு தலைவர்களுடன் அரசியல் செய்த கருணாநிதி, தான் வாழ்ந்த காலத்தில் வாரிசுகளை உருவாக்கி, ஜனநாயக முறைப்படி அவர்களை கட்சிப் பதவிகளில் அமர்த்தினார். அதுவே மிகப்பெரும் விமர்சனத்துக்கு ஆளாக்கப்பட்டது.
கருணாநிதி காலத்திலேயே கட்சியின் பொருளாளர் பொறுப்பை எட்டிப் பிடித்தார் ஸ்டாலின். கருணாநிதி மறைவுக்குப் பின் தலைவர் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார். கருணாநிதி போல காலம் தாழ்த்தாமல், தனது மகன் உதயநிதிக்கு கட்சியின் இளைஞரணி செயலாளர் பொறுப்பை வழங்கி உச்சி முகர்ந்த ஸ்டாலின், ‘கிச்சன் கேபினேட்’ ஆலோசனைப்படி உதயநிதியை பிரச்சார களத்தில் தற்போது இறக்கி விட்டிருக்கிறார்.
அனைத்துக் கட்சியினரும் தங்கள் வாரிசுகளை களமிறங்கும் காலம் இது; அதனால், பெரிய பேசு பொருளாக ஆகவில்லை. மாவட்ட அளவில் கோலச்சும் மாவட்ட செயலாளர்கள் மத்தியிலும் வாரிசு அரசியல் தவிர்க்க முடியாததாகி வருகிறது.
அந்த வகையில், கடலூர் கிழக்கு மாவட்ட திமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் வாரிசான கதிரவன் களமிறக்கப்படுகிறார். அரசியலில் அவர் போதிய ஆர்வம் காட்டவில்லை என்றாலும், தந்தையின் உந்துதலால் கட்சிக்குள் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறார். இந்தச் சூழலில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட கடந்த வாரம் கடலூர் மாவட்டத்திற்கு வந்தார் உதயநிதி ஸ்டாலின். அவருடன் வடலூரில் தனது வாரிசையும் மேடையேறச் செய்தார் எம்.ஆர்.கே.பி. தலைவரின் வாரிசுக்கு, தனது வாரிசை வாள் கொடுக்கச் செய்து அழகுப் பார்த்தார் அதே மேடையில் பேசிய தலைவரின் வாரிசோ, “இங்கு காணும் கூட்டத்தைப் பார்க்கும் போது குறிஞ்சிப்பாடித் தொகுதியின் வெற்றி உறுதியாகி விட்டது, இது எம்எல்ஏ தொகுதி மட்டுமல்ல” என பொடி வைத்துப் பேசியிருக்கிறார்.
அதாவது, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திற்கு அமைச்சர் பதவி உறுதி என சொல்லாமல் சொல்லி, அவரது சகாக்களை குஷிப்படுத்திச் சென்றிருக்கிறார் உதயநிதி.