தமிழகம்

ஆக்கிரமிப்பு வரன்முறை, கரோனா குறித்து தலைமைச் செயலாளர் ஆட்சியர்களுடன் ஆலோசனை

செய்திப்பிரிவு

ஆக்கிரமிப்புகளை வரன்முறைப்படுத்துதல், கரோனா கட்டுப்பாடு உள்ளிட்டவை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் க.சண்முகம் நேற்று ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த மார்ச் 25-ம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் 11-வது கட்டம் டிச.31-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. தற்போது தமிழகத்தில் கரோனா பரவல் குறைந்துள்ள போதிலும், சர்வதேச அளவில் பல நாடுகளில் வீரியமிக்க கரோனா வைரஸ் பரவி வருகிறது. வெளிநாட்டில் இருந்து தமிழகம் வருவோரை மாநில அரசு தொடர்ந்து கண்காணித்து தனிமைப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த கட்டமாக ஜனவரி மாதத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார். அதன்பின், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கப்படும்.

இதற்கிடையில், நேற்று தலைமைச் செயலகத்தில் காணொலி வாயிலாக, தலைமைச் செயலர் க.சண்முகம் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின்போது, நீர்நிலை உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், அங்கிருப்பவர்களை மறு குடியமர்த்தம் செய்தல் உள்ளிட்ட வரன்முறை பணிகளை மேற்கொள்ளுதல், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு அறிவிக்கப்பட்ட காப்பீடு, பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் ஊரகப்பகுதிகளில் நடைபெறும் ஒதுக்கீடு, கட்டுமானப் பணிகள், கரோனா பரவல்கட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்து விவாதித்தார். விவாதத்தின்போது, கரோனா பரவலை கட்டுப்படுத்திய மாவட்ட நிர்வாகத்தை பாராட்டிய அவர், பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT