தமிழகம்

பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 2,100 மாநகர பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள்: போக்குவரத்து துறை ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசனை

செய்திப்பிரிவு

பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நிர்பயா திட்டத்தின் கீழ் சென்னையில் 2,100 மாநகர பேருந்துகளில் சிசிடிவிகேமராக்களை பொருத்துவது குறித்து போக்குவரத்து துறைஆய்வுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மற்றும் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் போக்குவரத்து துறை செயலர் சி.சமயமூர்த்தி தலைமையில் சென்னை பல்லவன் இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இதில், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மற்றும் மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் (பொறுப்பு) கு.இளங்கோவன், போக்குவரத்துத் துறை தலைவர் அலுவலக சிறப்பு அலுவலர் சூ.ஜோசப் டயஸ் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.

கரோனா காலத்தில் அரசு போக்குவரத்து கழகங்களின் செயல்பாடுகள், கரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு இயக்கப்படும் அரசு பேருந்துகளின் எண்ணிக்கை, போக்குவரத்து கழகங்களில் செயல்படுத்தவுள்ள அரசு திட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக பேசப்பட்டன.

இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கரோனா அச்சம் காரணமாகபயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. எனவே, பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு புதிய வழித்தடங்களில் பேருந்துகளை இயக்குவதற்கான ஆய்வுபணிகளை மேற்கொள்ளவுள்ளோம்.

இதேபோல், நிர்பயா திட்டத்தின்கீழ் பெண்களின் பாதுகாப்புக்காக சென்னையில் முதல்கட்டமாக 2,100 மாநகர பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது, இதற்கான தலைமை கட்டுபாட்டு அறை அமைப்பது, நுண்ணறிவு தொழில்நுட்ப திட்டத்தை கொண்டு போக்குவரத்து துறையை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. ஆவடி, அம்பத்தூர் பணிமனைகளை மேம்படுத்தும் திட்டப்பணிகள் உள்ளிட்ட போக்குவரத்து துறையை சார்ந்த திட்டங்களை விரைவாக செயல்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT