மக்கள் அனைவருக்கும் விரிவான மருத்துவ வசதி அளிக்கும் பொருட்டு, கிராம ஊராட்சிகள் மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் கிடைப்பதற்காக அம்மா மினி கிளினிக்குகளை தமிழக அரசு தொடங்கி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 53 அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்படவுள்ளன. இதில் முதல்கட்டமாக 18 கிளினிக்குகள் அமைக்கப்படவுள்ளன. இதன்படி, கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொட்டையூர் ஊராட்சி, திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியம், குப்பம் கண்டிகை, திருத்தணி ஊராட்சி ஒன்றியம் கே.ஜி.கண்டிகை, ஆர்.கே.பேட்டை ஒன்றியம் வீரமங்கலம் ஆகிய 4 இடங்களில் அம்மா மினி கிளினிக்குகளை, ஊரகத் தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் நேற்று திறந்து வைத்தார். இதையடுத்து கர்ப்பிணிகளுக்கு அமைச்சர் ஊட்டச்சத்து பொருட்களை வழங்கினார்.
இதில், ஆட்சியர் பொன்னையா, முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, பொது சுகாதார துணை இயக்குநர்கள் ஜவஹர்லால், பிரபாகரன், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.