ராணிப்பேட்டை மாவட்டத்தில் பக்தர்களிடம் பணம் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருவலம் சாந்தா சுவாமியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பொதிகை நகரைச் சேர்ந்தவர் கேசவமூர்த்தி (50). தனியார் தோல் தொழிற்சாலையில் உற்பத்தி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர், திருவலம் பகுதியில் சர்வமங்களா பீடத்துக்கு அடிக்கடி சென்று வருவார். அப்போது, பீடாதிபதி சாந்தகுமார் (45) என்ற சாந்தா சுவாமியுடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
இதை பயன்படுத்திக்கொண்ட சாந்தா சுவாமி, கடந்த 2010-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை கேசவமூர்த்தியிடம் தொழில் முதலீடாக ரூ.45 லட்சம் வரை பணம் பெற்றுள்ளார். சாந்தா சுவாமி கூறியபடி லாபத்தை கொடுக்காமல் ஏமாற்றியதுடன் கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ.50 லட்சத்துக்கான காசோலையை வழங்கியுள்ளார். அந்த காசோலையில் பணம் இல்லாமல் திரும்பி வந்ததால் அதிர்ச்சியுடன் சாந்தா சுவாமியிடம் சென்று கேசவமூர்த்தி கேட்டபோது, ‘இங்கு வந்தால் சூனியம் வைத்து விடுவேன்’ என மிரட்டியுள்ளார்.
இது தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கேசவமூர்த்தி அளித்த புகாரின்பேரில், கடந்த மாதம் 7-ம் தேதி பணம் மோசடி, மிரட்டல் வழக்கில் சாந்தா சுவாமி கைது செய்யப்பட்டார்.
இவர், மீது மேலும் சிலரும் புகார் அளித்துள்ள நிலையில் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் பரிந்துரையின் பேரில் சாந்தா சுவாமியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் நேற்று உத்தரவிட்டுள்ளார்.