தமிழகம்

அதிமுக அரசின் ஊழல்களில் வேதனையானது அமைச்சர் காமராஜின் அரிசி ஊழல்தான்: ஸ்டாலின் பேச்சு

செய்திப்பிரிவு

அதிமுக ஆட்சியின் ஊழல்களில் வேதனை தரக்கூடியது, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மத்திய அரசு ஒதுக்கிய அரிசியை விற்றுக் காசாக்கியதுதான் என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

தஞ்சை மாவட்ட திமுக சார்பில் இன்று நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டப்பேரவைத் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி வாயிலாகப் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:

“சில நாட்களுக்கு முன்னால் தமிழக ஆளுநரைச் சந்தித்து அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலைக் கொடுத்தோம். முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், உதயகுமார், காமராஜ், ஜெயக்குமார் ஆகியோர் மீது ஊழல் புகார்களைக் கொடுத்துள்ளோம்.

இதில் மிக மிக முக்கியமானது, வேதனையானது உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மீதான புகார்தான். இந்த அதிமுக அரசுக்கு கொஞ்சம் கூட இரக்கம் கிடையாது என்பதற்கு உதாரணமான ஊழல்தான் காமராஜ் செய்துள்ள ஊழல். இந்தக் கரோனா காலத்து பாதிப்புகள் குறித்து நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை.

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு இலவசமாக அரிசி கொடுக்கிறது. அந்த அரிசியை வெளிச்சந்தையில் விற்று ஊழல் செய்துள்ளார் உணவுத்துறை அமைச்சர் காமராஜ். ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும் என்று மத்திய அரசு சொன்னது. இதன்படி தமிழகத்துக்கு மத்திய அரசு மொத்தம் 5 லட்சத்து 36 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த அரிசியை வாங்கி அனைவருக்கும் கொடுத்துவிட்டதாகப் பேட்டி தரும் அமைச்சர் காமராஜ்தான், இவ்வளவு அரிசியை வைக்க இடமில்லை என்று மத்திய அரசிடம் சொன்னதாகவும் பேட்டியும் தருகிறார். எது உண்மை? இந்த அரிசியைத்தான் இவர்கள் வெளிச்சந்தையில் விற்றுள்ளார்கள்.

இப்படி அரிசி எடுத்துச் செல்லப்பட்டபோது தூத்துக்குடியில் பிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் காமராஜ் வெளியிட்ட அறிக்கைகள், அறிவிப்புகள் முன்னுக்குப் பின் முரணாக இருக்கின்றன. அதாவது சாப்பிடும் சாப்பாட்டில் ஊழல் செய்யும் ஆட்சிதான் இந்த அதிமுக ஆட்சி.

'சோழ நாடு சோறுடைத்து' என்பார்கள். இப்படி அரிசியைக்கூட விட்டு வைக்காமல் ஊழல் செய்யும் இந்த நச்சுக் கூட்டத்துக்கு முடிவு கட்ட தஞ்சைத் தரணி தயாராகட்டும்”.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

SCROLL FOR NEXT