தமிழகம்

அச்சப்படும் அளவுக்கு ரஜினிக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை; உடல்நிலை சீராக உள்ளது: அப்போலோ நிர்வாகம் தகவல்

செய்திப்பிரிவு

ரஜினிக்கு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பரிசோதனைகளின் முடிவுகளும் வந்துவிட்டன. அச்சப்படும் அளவுக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லை என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

'அண்ணாத்த' படப்பிடிப்பில் 4 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரஜினிக்கு எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனை முடிவில், அவருக்கு நெகட்டிவ் என்பது தெரியவந்தது. ஆனாலும், ஹைதராபாத்தில் ரஜினி தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.

நேற்று (டிசம்பர் 25) திடீரென்று ரஜினிக்கு ரத்த அழுத்தம் சீராக இல்லாத காரணத்தால் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

மேலும், ரஜினியின் உடல்நிலை குறித்து இன்று (டிசம்பர் 26) காலை வெளியான மருத்துவமனைக் குறிப்பில், "உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று மேலும் சில பரிசோதனைகள் அவருக்குச் செய்யப்பட உள்ளன. அவரது பரிசோதனைகள் மற்றும் ரத்த அழுத்த அளவின் அடிப்படையில் அவர் எப்போது வீடு திரும்புவார் என்பது குறித்து இன்று மாலை தீர்மானிக்கப்படும்" என்று குறிப்பிட்டு இருந்தார்கள்.

இந்நிலையில் ரஜினியின் உடல்நிலை குறித்தும், வீடு திரும்புவது குறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

"நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பரிசோதனைகளின் முடிவுகளும் வந்துவிட்டன. அச்சப்படும் அளவுக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. இன்னும் சில பரிசோதனைகளின் முடிவுகளுக்காகக் காத்திருக்கிறோம். அவற்றின் முடிவுகளின் அடிப்படையிலும், இன்றிரவு ரஜினியின் ரத்த அழுத்த நிலவரத்தின் அடிப்படையிலும் அவரை மருத்துவமனையிலிருந்து விடுவிப்பது குறித்து நாளை காலை முடிவு எடுக்கப்படும்."

இவ்வாறு அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT