தமிழகம்

சுனாமி 16-வது ஆண்டு நினைவு தினம்: குமரி மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை; சோகத்தில் மூழ்கிய மீனவ கிராமங்களில் மக்கள் அஞ்சலி

எல்.மோகன்

கன்னியாகுமரி கடற்கரை கிராமங்களில் 16-வது ஆண்டு சுனாமி நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. குமரி மீனவர்கள் கடலுக்குச் செல்லாத நிலையில் நினைவிடங்களில் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி தமிழகத்தில் கடற்கரை கிராமங்களை தாக்கிய சுனாமி சோகத்தை எளிதில் மறக்க முடியாது. கன்னியாகுமரி, நாகை மாவட்டங்களில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன. சுனாமியின்போது கடல் அலையில் சிக்கி உயிரிழந்தவர்கள் நினைவாக கனனியாகுமரி மாவட்டத்தில் குளச்சல், கொட்டில்பாடு, மணக்குடி, கன்னியாகுமரி முக்கடல் சங்கம கடற்கரை பகுதியில் நினைவு ஸ்தூபிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆண்டுதோறும் இந்த நினைவிடங்களில் சுனாமியால் உயிரிழந்தோரின் உறவினர்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் இன்று

சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கொட்டில்பாட்டில் சுனாமியால் உயிரிழந்த 199 பேர் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் உறவினர்கள் மெழுகுவர்த்திஏந்தியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

இதையொட்டி குளச்சல் சுனாமி காலனியில் இருந்து மவுன ஊர்வலம் நடந்தது. கொட்டில்பாடு பங்குதந்தை ராஜ் ஊர்வலம் தொடங்கி வைத்தார். தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் சர்ச்சில் தலைமையில் நடந்த இந்த ஊர்வலத்தில் மீனவர்கள், பெண்கள், குழந்தைகள் திரளானோர கலந்துகொண்டனர். ஊர்வலம் சுனாமியால் இறந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்ட கொட்டில்பாடு கல்லறையை அடைந்தது. அங்கு துக்கம் தாளாமம் இறந்தவர்களின் உறவினர்கள் கல்லறை முன்பு கதறி அழுதது பார்ப்போரை கண்ககலங்க செய்தது. அதைத்தொடர்ந்து கொட்டில்பாடு அலெக்ஸ் ஆலயத்தில் நினைவு திருப்பலி நடைபெற்றது.

இதைப்போல் குளச்சல் காணிக்கை மாதா ஆலய வளாகத்தில் சுனாமியால் இறந்தவர்களுக்கு மீனவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். மணக்குடி சுனாமி ஸ்தூபியில் மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மரியாதை செலுத்தினர். கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் உள்ள நினைவு ஸ்தூபியில் குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

சுனாமி நினைவு நாளை முன்னிட்டு ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான குமரி கடற்கரை கிராமங்களில் இன்று மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீனவ கிராமங்கள் வெறிச்சோடி அமைதியாக காணப்பட்டது. மீனவ கிராமங்களில் உள்ள தேவாலயங்களில் சுனாமியால் இறந்தவர்களின் நினைவாக திருப்பலி நிகழ்ச்சிகள நடைபெற்றன.

SCROLL FOR NEXT