தமிழகம்

தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை வாய்ப்பு; ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை: வானிலை ஆய்வு மையம் தகவல்

செய்திப்பிரிவு

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவல்:

“தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்து வரும் 2 நாட்களுக்குப் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக டிச.28ஆம் தேதியில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

டிச.29 மற்றும் டிச.30 ஆகிய தேதிகளில் தென் தமிழகம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 (86 டிகிரி ஃபாரன்ஹீட்) டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி (69.8 டிகிரி ஃபாரன்ஹீட்) செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம் எதுவுமில்லை.

மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை”.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT