தமிழக அரசின் பொங்கல் பரிசுப் பணம் பெற குடும்ப அட்டை மட்டும் போதும். கைவிரல் ரேகை வலியுறுத்தப்படாது என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு ஆண்டுதோறும் பொங்கல் பரிசுப் பணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கம் மற்றும் ஒருகிலோ பச்சரிசி, சர்க்கரை, வெல்லம், கரும்பு முந்திரி, ஏலக்காய், திராட்சை எனப் பொங்கல் தயாரிக்கும் பொருட்கள் அடங்கிய பையை வழங்கி வருகிறது.
இந்த ஆண்டு பொங்கல் பரிசாக ரூ.1000 என்பதை மாற்றி ரூ.2500 வழங்குவதாகவும், வழக்கமான பொங்கல் பொருட்களுடன் முழுக் கரும்பும் அரிசி அட்டைத்தாரர்களுக்கு வழங்கப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
2 கோடியே 6 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுடன், சர்க்கரை அட்டையில் இருந்து அரிசி அட்டைக்கு மாற விண்ணப்பித்திருக்கும் 3,72,235 அட்டைதாரர்களுக்கும்- அவ்வாறு மாறும் பட்சத்தில் அவர்களுக்கும், முகாம்களில் வசிக்கும் 18,923 இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கும் சேர்த்து பொங்கல் பரிசை வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இதன்மூலம் ஒட்டுமொத்தமாக 2.06 கோடி பேர் மற்றும் அரிசி அட்டைத்தாரர்களாக மாற்றப்பட்ட மீதமுள்ளோருக்கும் சேர்த்து ரூ.2,500 ரொக்கத் தொகையுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பும் கிடைக்கும். பொங்கல் பரிசுப் பணம் பெறுவதற்கான டோக்கன் டிச.26 முதல் வீடு வீடாக வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. அதன்படி இன்று முதல் வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.
இதனிடையே பொங்கல் பரிசுத் தொகுப்பு ரூ.2500/- ஐப் பெற சம்பந்தப்பட்ட அட்டைதாரர்கள் நேரில் வந்து கைவிரல் ரேகை வைக்கும் முறையில் (பயோமெட்ரிக் முறையில்) பணம் வழங்கப்படும் எனத் தகவல் வெளியானது. இதனால் பொதுமக்களிடையே குழப்பம் ஏற்பட்டது.
இதுகுறித்து உணவுத்துறை அமைச்சர் காமராஜிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “ரூ.2500 உள்ளடக்கிய பொங்கல் பரிசை, குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட நியாயவிலைக் கடைகளில் மட்டுமே வாங்க முடியும். அதற்கு பயோ மெட்ரிக் முறை (கை விரல் ரேகை வைக்கும் முறை) பயன்படுத்தப்பட மாட்டாது. ஆகையால், முன்னதாக குடும்ப அட்டையைப் பயன்படுத்தி பொருட்களை வாங்கிய முறைப்படியே பொங்கல் பரிசையும் பெற்றுக்கொள்ளலாம். குடும்ப அட்டையும், டோக்கனும் இருந்தால் போதும்” எனத் தெரிவித்தார்.
இதன் மூலம் சம்பந்தப்பட்டவர்கள், குடும்ப அட்டை டோக்கனுடன் சென்று கைரேகை பதிந்து பணம் பெற வேண்டும் என்கிற சந்தேகம் நீங்கியது. அரசு வீடு வீடாக வழங்கிய டோக்கன், குடும்ப அட்டை ஆகிய இரண்டையும் சம்பந்தப்பட்டவர்கள் பொருட்கள் வாங்கும் நியாய விலைக்கடையில் காட்டி அரசின் ரூ.2500 பணம் பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற்றுக் கொள்ளலாம்.