ஹைதராபாத் அப்போலோவில் சிகிச்சை பெற்றுவரும் நடிகர் ரஜினிகாந்திடம் முதல்வர் பழனிசாமி தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார்.
நடிகர் ரஜினிகாந்த கட்சி அறிவிப்பை டிச.31 அன்று வெளியிடுவதாகத் தெரிவித்து, அதற்குமுன் 'அண்ணாத்த' படப்பிடிப்பை முடித்துக் கொடுக்க வேண்டும் என்பதற்காக படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத்துக்குச் சென்றார்.
அங்கு படப்பிடிப்பு நடந்துவந்த நிலையில், படக்குழுவைச் சேர்ந்த 4 பேருக்கு திடீரென கரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ரஜினிகாந்த் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் திடீரென நேற்று ரஜினிகாந்த் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தெலங்கானா ஆளுநர் தமிழிசை, தமிழக பாஜக தலைவர் முருகன் உள்ளிட்டோர் ரஜினியின் உடல்நிலை குறித்து அவரிடம் விசாரித்தனர்.
இந்நிலையில் அப்போலோ மருத்துவமனை மீண்டும் அவரது உடல் நிலை குறித்து அறிவிப்பு வெளியிட்டது.
"தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் ரஜினி இருப்பார். அவரது நிலையற்ற ரத்த அழுத்த மாறுபாட்டைக் கருத்தில் கொண்டு முழுமையாக ஓய்வெடுக்கவும், அவரைப் பார்வையாளர்கள் யாரும் சந்திக்க வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. அவரது பரிசோதனைகள் மற்றும் ரத்த அழுத்த அளவு அடிப்படையில் அவர் எப்போது வீடு திரும்புவார் என்பது குறித்து இன்று மாலை தீர்மானிக்கப்படும்" என்று அப்போலோ நிர்வாகம் தெரிவித்தது.
இந்நிலையில் முதல்வர் பழனிசாமி ரஜினிகாந்திடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார்.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திரைப்பட நடிகர் ரஜினிகாந்தை இன்று (26.12.2020) தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும், அவர் விரைவில் பூரண குணமடைய இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்”.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.