புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை பின்புறம் நடந்த சுனாமி நினைவு நாள் நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினார். 
தமிழகம்

16ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்; புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி அஞ்சலி

அ.முன்னடியான்

16ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி புதுச்சேரியில் சுனாமி தாக்கியது. இதில் பலர் உயிரிழந்தனர். ஏராளமானோர் தங்கள் உறவுகளையும், உடமைகளையும் இழந்தனர். இவர்களின் நினைவாக ஆண்டுதோறும் டிச.26ஆம் தேதி சுனாமி நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று (டிச.26) 16ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

புதுச்சேரி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் புதுச்சேரி கடற்கரையில் காந்தி சிலை பின்புறமும் சுனாமியால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதல்வர் நாராயணசாமி மலர்வளையம் வைத்தும், பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர் கந்தசாமி, எம்எல்ஏ லட்சுமிநாராயணன், காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், மாவட்ட ஆட்சியரும், மீன்வளத்துறைச் செயலாளருமான பூர்வா கார்க், இயக்குநர் முத்து மீனா மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல், புதுச்சேரி அதிமுக கிழக்கு மாநிலச் செயலாளர் அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் வம்பாக்கீரப்பாளையம் மீனவ மக்கள் சோனாம்பாளையம் சந்திப்பில் இருந்து அமைதி ஊர்வலமாகப் புறப்பட்டு கடற்கரை சாலையில் டூப்லக்ஸ் சிலை அருகில் கடலில் மலர்தூவியும், பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினர்.

வையாபுரி மணிகண்டன் எம்எல்ஏ தலைமையில் ஊர் மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஊர்வலமாக வந்து முத்தியால்பேட்டை சோலைநகர் கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, கடலில் பால் ஊற்றி, மலர்கள் தூவி சுனாமியால் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி, இனியும் ஒரு பேரழிவு வேண்டாம் எனக் கடல் அன்னையை வேண்டிக்கொண்டனர்.

வீராம்பட்டினம் மீனவ கிராமத்தில் பைபர் படகு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில், வீராம்பட்டினம் கிராம மக்கள் செங்கழுநீர் அம்மன் கோயில் தேரடியில் இருந்து மாட வீதிகள் வழியாக கடற்கரையை வந்தடைந்தனர். அதன் பின்னர், கடற்கரைப் பகுதியில் உள்ள சுனாமி நினைவு சிலைக்கு ஜெயமூர்த்தி எம்எல்ஏ மற்றும் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, மக்கள் நீதி மய்யம் கட்சி பிரமுகர்கள் மற்றும் மீனவ மக்கள் மாலை அணிவித்தும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினார்கள். தமிழ்நாடு மீனவர் பேரவை அமைப்பின் புதுச்சேரி தலைவர் மலை.தருமலிங்கம் தலைமையில் மீனவர்கள் காந்தி சிலை பின்புறம் கடலில் பால் ஊற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

மேலும், கனகசெட்டிகுளம், காலாப்பட்டு, வைத்திக்குப்பம், பனித்திட்டு, நரம்பை, மூர்த்திக்குப்பம் புதுக்குப்பம் உட்பட புதுச்சேரியில் உள்ள 18 மீனவ கிராமங்களிலும் மீனவப் பஞ்சாயத்து மற்றும் மீனவ அமைப்புகள் சார்பிலும் சுனாமியால் இறந்தவர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. சுனாமி நினைவு தினத்தையொட்டி புதுச்சேரியில் மீனவர்கள் யாரும் இன்று (டிச.26) கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. அவர்களது படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT