கரூர் மாவட்டத்தில் 8 மாதங்களுக்கு பிறகு புதிதாக யாருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை.
கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த டெல்லி மாநாட்டுக்கு சென்ற வந்த 42 வயது ஆணுக்கு கடந்த மார்ச் மாதம் இறுதி வாரத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அதன்பின் அவருடன் தொடர்பிலிருந்தவர்கள், அவர்களுடன் தொடர்பிலிருந்த கரோனா தொற்று ஏற்பட்டவர்கள், மேலும் புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டவர்கள் என 42 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த அனைவரும் குணமாகி ஏப். 30-ம் தேதி வீடு திரும்பினர்.
கரோனா இல்லாத மாவட்டம் என அறிவிக்கப்பட்ட நிலையில், அன்றைய நாள் இரவே சென்னையிலிருந்து கரூர் திரும்பிய 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அதன்பின் கரோனா தொற்று ஒற்றை இலக்கத்திலிருந்து இரட்டை இலக்கத்துக்கு உயர்ந்தது. இருந்தபோதும், 3 இலக்கத்துக்கு உயராமல் கட்டுப்பாட்டுக்குள்ளே இருந்தது.
கரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்க கரூர் பழைய அரசு மருத்துவமனையில் சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை பிரிவு, வெளியூர்களிலிருந்து வருபவர்களை கண்காணிக்க காணியாளம்பட்டி அரசு பாலிடெக்னிக், தளவாபாளையம், புலியூர் தனியார் பொறியியல் கல்லூரிகளில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாவட்டத்தில் நேற்று (டிச. 25) வரை 5,106 கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, 4,970 பேர் குணமடைந்த நிலையில் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 8 மாதங்களாக மாவட்டத்தில் நாள்தோறும் புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டு வந்த நிலையில், இன்று (டிச. 26) மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை. கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 18 ஆண்கள், 13 பெண்கள் என 31 பேரும், வீடுகளில் 56 பேர் என மாவட்டத்தில் 87 பேர் சிகிச்சையில் உள்ளனர்.