மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் அருணாச்சலம் பாஜகவில் இணைந்தார்.
நடிகர் கமல்ஹாசன், 2018-ம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம்என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். கட்சி தொடங்கியதில் இருந்து அதில் பொதுச் செயலாளராக இருந்து வந்தவர் அருணாச்சலம்.
இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தமிழக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் ஆகியோர் முன்னிலையில் அருணாச்சலம் நேற்று பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இதேபோல, பாமக ஊடகப் பிரிவுஒருங்கிணைப்பாளர் சோழன் குமார்வாண்டையாரும் பாஜகவில் இணைந்தார். இருவருக்கும் மத்தியஅமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பாஜக உறுப்பினர் அட்டையை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அருணாச்சலம் கூறியதாவது:
புதிய இந்தியாவை வடிவமைத்தமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த தினத்தில் எங்களைப் போன்ற புதியவர்களை தேசிய கட்சிஅரவணைப்பது பெரிய பாக்கியமாக உள்ளது. நான் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவன். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களால் என்னபயன் உள்ளது என்பது ஒரு விவசாயியாக எங்களுக்கு தெரியும்.
இந்த சட்டங்களை ஆதரிக்க வேண்டும் என கமல்ஹாசனிடம் முறையிட்டேன். ஆனால், விவசாயிகளுக்கு கிடைக்கும் நலன், பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் கட்சி அடிப்படையில் முடிவு எடுத்தார்கள். திமுகவின் மாதிரி கட்சியாகமக்கள் நீதி மய்யம் ஆகிவிடக்கூடாது. மய்யம் என்றால் விவசாயிகளுக்கு நலன் தரக்கூடியதா, இல்லையா என பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆனால், அதை அவர் ஏற்கவில்லை. தவறுதலான போராட்டத்துக்கு துணை போய்க் கொண்டு இருந்தார்கள். எனவே, மனசாட்சிக்கு விரோதமாக அங்கு இருக்க விருப்பமில்லை என்று கூறிவிட்டு பாஜகவின் அடிப்படைத் தொண்டனாக இணைத்துக் கொண்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.