பணிநீக்கம் மற்றும் பாலியல் துன்புறுத்தல் புகாரில் முன்னாள் பெண்ஊழியருக்கு லயோலா கல்லூரி ரூ.64.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநிலமகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை லயோலா கல்வி நிறுவன வளாகத்தில் லயோலா மேம்பாட்டு அலுவலகம் மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்கம் உள்ளது. இதை நிர்வகிக்க 2010-ம் ஆண்டு பெண் ஊழியர் ஒருவர் நியமிக்கப்பட்டார். இவர் தன் பணியின்போது முன்னாள் மாணவர் சங்கத்துக்கு வந்த ரூ.1 கோடி நிதியை அப்போதைய இயக்குநர் முறைகேடாக பயன்படுத்தியதை கண்டறிந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கல்லூரி நிர்வாகத்துக்கு பெண் ஊழியர் புகார் அளித்தார். அதன் மீது எந்தநடவடிக்கையும் எடுக்காமல், ஊழியரை இடைநீக்கம் செய்ததுடன் ஊதியமும் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதுதவிர பெண் ஊழியரின் கல்வி சான்றிதழ்களை தராமல் அலைக்கழிப்பு செய்ததுடன், அவர்பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட அவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதன் மீதானவிசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த விவகாரத்தை சூமோட்டா பிரிவில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் தன்னிச்சையாக விசாரணைக்கு எடுத்தது. ஆணையத் தலைவர் கண்ணகி பாக்கியநாதன் தலைமையிலான குழுவினர் இதுகுறித்த புகாரை கேட்டு பெற்று, அதன் அடிப்படையில் கடந்த நவம்பர் மாதம் லயோலா கல்லூரி நிர்வாகத்திடமும் டிச.15-ம் தேதி கல்லூரியிலும் விசாரணை மேற்கொண்டனர். அதன்முடிவில் பெண் ஊழியர் மீதுஎவ்வித தவறும் இல்லை என்பதை உறுதி செய்தது.
இதன்பின்னர் ஆணையத் தலைவர் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: பாதிக்கப்பட்ட பெண் ஊழியரின் புகார் குறித்த விசாரணை நடத்தப்பட்டது. கல்லூரிஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டால் விதிப்படி கல்லூரி கல்விஇயக்குநரகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால், பெண்ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டபோது அதிகாரப்பூர்வமாக எந்த கடிதமும் அனுப்பப்படவில்லை.
எவ்வித தவறும் செய்யாத ஊழியரை உரிய காரணமின்றி லயோலா கல்லூரி நிர்வாகம் பணிநீக்கம் செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதனால் ஊழியருக்கு ஏற்பட்ட மனஉளைச்சல், உடல் மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
அதன்படி, 2014-ம் ஆண்டு ஏப்ரல்முதல் நிலுவையில் உள்ள ஊதியம்ரூ.24.3 லட்சம், மனஉளைச்சல் மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு ரூ.25 லட்சம், தவறான குற்றச்சாட்டுக்கு ரூ.15 லட்சம் என மொத்தம் ரூ.64.3 லட்சம் இழப்பீடாக தாமதமின்றி வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்த வழக்குஉயர் நீதிமன்றத்தில் ஜனவரியில் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.