பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் உள்ள அரசு கரோனா மருத்துவமனையில் சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: பிரிட்டனில் இருந்து கடந்த 16-ம் தேதி வந்த மதுரையைச் சேர்ந்தவர், 17-ம் தேதி வந்த சென்னையைச்சேர்ந்தவர், 22-ம் தேதி வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த 2 பேர் என 4 பேருக்குகரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர்களுக்கு தனி வார்டில்சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்களின் சளி மாதிரிகள் புனே ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.
2,500-க்கும் மேற்பட்டோர் வருகை
ஏற்கெனவே, பிரிட்டனில் இருந்து சென்னை வந்த இளைஞருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இந்த 4 பேரின் பரிசோதனை முடிவுகள் கிடைக்க 5 நாட்கள் ஆகும். அதன்பிறகே புதிய வைரஸ்தொற்றா என்பது தெரியும். கடந்த நவ. 25-ம் தேதியில் இருந்து 2,500-க்கும் மேற்பட்டோர் பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்துள்ளனர். இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. முடிவுகள் வந்துள்ள 400 பேரில்,தற்போது 4 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் தினமும் சராசரியாக 70,000 பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. இதில், 1,000 பேருக்கு தொற்று உறுதியாகிறது. கடந்த காலங்களை ஒப்பிடுகையில் தற்பொழுது கரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது.
அதேநேரம், கடந்த ஜூன், ஜூலைமாதங்களை ஒப்பிடுகையில் தற்போது கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு குறைந்துள்ளது.
தடுப்பூசி விரைவில் கிடைத்துவிடும். பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியின் தன்மை ஆய்வு செய்யப்படுகிறது. தமிழகத்தில் முதியோர்கள் அதிகமாக இருப்பதால் கூடுதலான தடுப்பூசி தமிழகத்துக்கும் கிடைக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தாமாக முன்வந்து பரிசோதனை
இதற்கிடையே, பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பிரிட்டனில் இருந்து கடந்த நவ.25 முதல் டிச. 23 வரை தமிழகம் வந்தவர்கள் தாமாக முன்வந்து ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும் சந்தேகங்களுக்கு 104 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்’’ என்று தெரிவித்துள்ளார்.