திருவள்ளூர் அருகே ஜமீன் கொரட்டூரில் தனியார் கப்பல் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி விடுதியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 172 பேர் தங்கி படித்து வருகின்றனர்.
இக்கல்லூரி விடுதியில் நேற்று காலை மாணவர்கள் கிறிஸ்துமஸ் விழாவை கேக் வெட்டி கொண்டாடினர். அப்போது, 3 மற்றும் 4-ம் ஆண்டு மாணவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
அப்போது, சில மாணவர்கள் பிளாஸ்டிக் நாற்காலியின் உடைந்த கால் பகுதியால் 3-ம் ஆண்டு மாணவரான, பிஹார் மாநிலம், பாட்னாவைச் சேர்ந்த ஆதித்யா ஷர்மாவின் கழுத்தில் குத்தியுள்ளனர்.
இதில், படுகாயமடைந்த ஆதித்யா ஷர்மா, சக மாணவர்களால் பூந்தமல்லியில்உள்ளதனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஆதித்யா ஷர்மாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, தகவலறிந்த காஞ்சிபுரம் எஸ்பி (திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு) சண்முகப்பிரியா மற்றும் வெள்ளவேடு இன்ஸ்பெக்டர் ஷோபாதேவி உள்ளிட்ட போலீஸார், சம்பவ இடம் விரைந்து விசாரணையில் நடத்தி வருகின்றனர்.
மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து, வெள்ளவேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.