பெரியபாளையம் அருகே 4 வயது குழந்தை மர்மக் காய்ச்ச லால் உயிரிழந்த நிலையில் மரணத்துக்கு காரணம் போலி மருத்துவரின் தவறான சிகிச்சையா அல்லது டெங்கு காய்ச்சலா என்பதை அறிய உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப் பட்டது.
பெரியபாளையம் அருகே உள்ள கிளாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விஜயன் - சூர்யா தம்பதியினர். இவர்களின் 4 வயது குழந்தையான ஸ்ரீதர் கடந்த வாரம் மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டார். அவருக்கு பட்டாபிராம், தாமரைப்பாக்கம் பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைப்பேரைச் சேர்ந்த போலி மருத்துவரான மகேஸ்வரன் என்பவர் சிகிச்சையளித்தார்.
அதுவும் பலனளிக்காத தால், மேல் சிகிச்சைக்காக கடந்த 13-ம் தேதி சென்னை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால்வழியிலேயே குழந்தை உயி ரிழந்தது.டெங்கு காய்ச்சலால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல் பரவியதையடுத்து சுகாதார துறையின் கொள்ளை நோய் தடுப்புப் பிரிவு இணை இயக்குநர் சேகர், மாவட்ட சுகாதார துறையின் துணை இயக்குநர் பிரபாகரன் உள்ளிட்ட மருத்துவ அதிகாரிகள் 14-ம் தேதி கிளாம்பாக்கத்தில் ஆய்வு செய்தனர். முதல்கட்ட ஆய்வில் ஸ்ரீதர், டைபாய்டு காய்ச்சலால் உயிரிழந்ததாக கூறப் படுகிறது.
இதற்கிடையே ஸ்ரீதர் உயிரிழப்பு தொடர்பாக வழக்கு பதிந்த பெரியபாளையம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதுதவிர திருவள்ளூர் மாவட்ட மருத்துவ துறையின் இணை இயக்குநரான மோகனன் குழுவினரும் கன்னிகைப்பேரில் கடந்த 14-ம் தேதி ஆய்வு மேற்கொண்டனர்.
இதில்அப்பகுதியில் கிளினிக் நடத்தி வந்த பிஏ, எம்எஸ் சித்தா படித்த மகேஸ்வரன் (27) மற்றும் இளங்கலை பட்டதாரியான கவுசே அஷீம்பாஷா (47) ஆகிய போலி மருத்துவர்கள் என்பதை கண்டறிந்தனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் ஸ்ரீதர் போலி மருத்துவரின் தவறான சிகிச்சையால் உயிரிழந்தாரா? என்பதை அறிய, கிளாம்பாக்கம் மயானத்தில் புதைக்கப்பட்ட குழந்தையின் உடல் ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் தமிழ்ச்செல்வி முன்னிலையில் நேற்று தோண்டி எடுக்கப்பட்டது. மருத்துவக்குழுவினர் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அங்கேயே உடல் மீண்டும் புதைக்கப்பட்டது.
இந்த பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகுதான், ஸ்ரீதரின் உயிரிழப்பு போலி மருத்துவரின் தவறான சிகிச்சையால் நிகழ்ந்ததா, எந்த வகையான காய்ச்சலால் உயிரிழப்பு ஏற்பட்டது என்ற விபரங்கள் தெரியவரும்.
இதனிடையே, கிளாம்பாக்கத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் முடிவும் வந்தால்தான் குழந்தையின் உயிரிழப்புக்கு உண்மையான காரணம் தெரியவரும். இருப்பினும் கிளாம்பாக்கம் பகுதியில் கொசு ஒழிப்பு மற்றும் மருத்துவ பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.