தமிழக அரசியல் களத்தில் சத்தமில்லாமல் ஒரு வரவேற்கத்தக்க மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆம், வெள்ளைச் சட்டை, வேட்டியிலும், பாரம்பரிய சேலையிலும் உலா வரும் மூத்த அரசியல்வாதிகள் மத்தியிலும், இளைஞர்களை தங்களுக்கு சரி நிகராக வெளிச்சத்துக்கு வருவதை விரும்பாத மூத்தத் தலைவர்கள் மத்தியிலும் இளம் அரசியல்வாதிகள் சிலர் பளிச்சிடவே செய்கின்றனர்.
இளம் அரசியல்வாதிகளை அரசியல் கட்சிகளும் முன்னிலைப்படுத்தத் தொடங்கியுள்ளன. இதன் பின்னணியில் இருக்கும் மிகப் பெரிய காரணி செய்தித் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகள் என்றால் அது மிகையாகாது.
வீடுகளில் மாலை நேரங்களை சீரியல்கள் மட்டும் ஆக்கிரமித்திருந்த காலம் கடந்து தற்போது தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளும் இடம்பெறத் தொடங்கியுள்ளன. எனவே, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விவாதப் பொருளாகும் சமூகப் பிரச்சினைகளில் தங்கள் கட்சியின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க இளைஞர்களை முன் நிறுத்துகின்றன அரசியல் கட்சிகள். 12%-க்கும் மேலான வாக்காளர்கள் இளைஞர்கள் என்ற புள்ளிவிவரமும் அரசியல் கட்சிகளை இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வைத்துள்ளது.
ஆளூர் ஷானாவாஸ்... ஊடகவியல் பட்டதாரியான இவர் இன்னமும் 30 வயதைக் கூட கடக்கவில்லை. ஆனால், விடுதலை சிறுத்தைக் கட்சி சார்பாக பல்வேறு விவாத நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கும் ஷானாவாஸ், தலித்துகளுக்காக உரக்கப் பேசுகிறார். இத்தனைக்கு இவர் தலித் அல்ல. துடிப்பான பேச்சால் கட்சியின் செய்தித் தொடர்பாளர்களில் அதிகமாக கவனம் ஈர்த்தவர் இவரே. கட்சியின் துணைப் பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
நம்மிடம் அவர் கூறும்போது, "என்னைப் போன்ற இளைஞர்கள் சமூகத்தின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து பேசும்போது குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும்போது அவர்களுக்கும் ஓர் உத்வேகம் பிறக்கிறது. சமூக மேம்பாட்டுக்கு தாங்களும் பங்களிக்கலாம் என்ற எண்ணம் உருவாகிறது.
தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் சமூக சிக்கல்கள் குறித்து கட்சியின் நிலைப்பாட்டை முழுமையாக தெரிவிக்க நேரம் கிடைக்காவிட்டாலும் இத்தகைய விவாத நிகழ்ச்சிகள் மூலம் கட்சியை லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த முடிகிறது" என்றார் அவர்.
திமுகவின் செய்தித் தொடர்பாளர்களுள் ஒருவரான தமிழன் பிரசன்னா கூறும்போது, "60 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக அரசியல் களத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய திமுகவின் பிரதிநிதியாக வாதங்களை முன்வைக்கும்போதெல்லாம் என் மீது இருக்கும் அழுத்தத்தை உணர்கிறேன். சிலவேளைகளில் பதற்றமடையச் செல்லும் அளவுக்கு பிற கட்சிகளைச் சேர்ந்த மூத்த பேச்சாளர்கள் 4 பேரை எதிர்கொள்ளும் சூழலையும் சந்தித்திருக்கிறேன்.
கல்லூரி காலத்திலேயே அரசியலில் ஈடுபடத் தொடங்கிவிட்டேன். கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் என்னை வழிநடத்தியுள்ளனர். எங்கள் கட்சித் தலைவர் கருணாநிதியே எனக்கு சில நேரங்களில் நேரடியாக ஆலோசனை வழங்கியிருக்கிறார்" என்றார் பெருமிதத்துடன்.
அதேபோல், மதிமுகவில் இருந்து அதிமுகவில் இணைத்துக் கொண்ட காசிநாத் பாரதியும் இளம் அரசியல்வாதிகளில் குறிப்பிடத்தக்கவர். இவர் ஆளுங்கட்சிக்கு எதிராக முன்வைக்கப்படும் விமர்சனங்களை கையாளும் விதம் அதிகம் கவனிக்கப்படுகிறது.
திமுக, அதிமுக, விசிக என அனைவரும் இளைஞர்களை முன் நிறுத்தும்போது காங்கிரஸ் மட்டும் சும்மா இருக்குமா என்ன? தமிழக காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் சுதா ராமகிருஷ்ணன் குறித்தும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
இளைஞர்களை அரசியலில் ஊக்குவிக்க வேண்டும் எனக் கூறும் அவர், "பெரும்பாலான அரசியல் கட்சிகள் இளைஞர்களை அரசியலில் ஊக்குவிக்காததற்கு முன் வைக்கும் குற்றச்சாட்டு இளைஞர்களுக்கு வரலாற்றுப் பின்னணியும், பார்வையும் இருக்காது என்பதே. ஒருவருக்கு வரலாறு தெரிந்திருக்க வேண்டும் என்றால் அவர் அந்த காலக்கட்டத்தில் வாழ்ந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்த வகையில் காங்கிரஸ் கட்சி இந்த பழமைவாத சிந்தனையில்லாமல் திறந்த மனதுடன் இளைஞர்களை வரவேற்கிறது. எனவே, நான் காங்கிரஸ் கட்சியில் இருப்பதில் மகிழ்கிறேன்" என்றார்.
இப்படி தமிழக அரசியலுக்கு புதுவரவாக இருக்கும் இளைஞர்கள் கட்சிகளுக்கு புதுப்பொலிவை தந்திருக்கின்றனர்.
தமிழில்: பாரதி ஆனந்த்