‘தி இந்து’ வின் ‘உங்கள் குரல்’ சேவையைப் பயன்படுத்தி ஏராளமான வாசகர்கள் தினந்தோறும் தங்களது புகார்கள், குறைகளை பதிவு செய்துவருகின்றனர். அதில் வாசகர்கள் பகிர்ந்துகொண்ட புகார்கள்:
தாம்பரம் ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் வசதி தேவை
சென்னை
அதிகமாக பயணிகள் கூடும் தாம்பரம் ரயில் நிலையத்தில் போதிய அளவில் எஸ்கலேட்டர் வசதி கொண்டுவர வேண்டு மென ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக ‘தி இந்து’ உங்கள் குரலில் வாசகர் ஜி.ஆர்.சுப்பிரமணியன் கூறியதாவது:
சென்னையில் தாம்பரம் முக்கியமான இடமாக உள்ளது. வெளியூரில் இருந்து ரயிலில் வரும் பயணிகள் பலரும் தாம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கிச் செல்கின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் தாம்பரம் ரயில் நிலையத்தை பயன்படுத்துகின்றனர்.
எனவே, அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண் டும். குறிப்பாக, வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் நடைமேடைகளை கடந்து செல்ல கடும் அவதிக் குள்ளாகின்றனர். தாம்பரம் நுழைவாயில் இடப்புறத்தில் எஸ்கலேட்டர் வசதி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பல நாட்கள் பழுதாகி நிற்கிறது. முறையான பராமரிப்பு இல்லாததே இதற்கு காரணம்.
விரைவு ரயில்கள் அதிகமாக வந்து செல்லும் 6-வது மற்றும் 7வது நடைமேடைகளிலும், புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் 1வது மற்றும் 2-வது நடைமேடைகளிலும் எஸ்கலேட்டர் வசதிகள் அமைக்க வேண்டும். அப்போது வயதானவர்கள், மாற்றுத் திற னாளிகள், நோயாளிகள் உட்பட அனைத்து தரப்பு பயணிகளும் எளிதாக கடந்து செல்ல முடியும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவரி டம் கேட்டபோது,‘‘முக்கியமான ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு எஸ்கலேட் டர்கள் நிறுவப்பட்டு வருகின்றன. தாம்பரத்தில் புதிய எஸ்கலேட்டர்கள் நிறுவுவது குறித்து ரயில்வே நிர்வாகத் துக்கு முறைப்படி பரிந்துரைக்கப்படும்’’ என்றார்.
***
சென்னை விமான நிலையத்தில் உடையாத கண்ணாடிகளை பயன்படுத்த வேண்டும்
சென்னை
சென்னை விமான நிலையத்தில் எளிதில் உடையாத கண்ணாடிகளை பயன்படுத்த வேண்டும் என்று உங்கள் குரலில் வாசகர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ஆதம்பாக்கத்தை சேர்ந்த ஏ.கே.சேஷாத்ரி என்ற வாசகர் ‘தி இந்து உங்கள் குரல்’ தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு கூறும்போது, “சென்னை விமான நிலையத்தில் அடிக்கடி கண்ணாடிகள் உடைந்து விழுந்து விபத்து ஏற்படுகிறது. இதைத் தடுக்க விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள கண்ணாடிகளை அப்புறப் படுத்திவிட்டு, எளிதில் உடையாத கண்ணாடி களை அமைக்க வேண்டும்” என்றார்.
இதுபற்றி சென்னை விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, “விமான நிலை யத்தில் 10 ஆயிரம் கண்ணாடிகள் வைக்கப் பட்டுள்ளன. ஆயிரம் கண்ணாடிகளுக்கு ஒரு கண்ணாடி உடைவது பெரிய நிகழ்வு அல்ல. நல்ல தரமான கண்ணாடிகள்தான் விமான நிலையத்தில் உள்ளன” என்றனர்.
வெளி மாநிலத்தவர்களுக்கு குடும்ப அட்டை வழங்குவதில் தாமதம்
காஞ்சிபுரம்
வெளி மாநிலத்திலிருந்து குடிபெயர்ந்த நபருக்கு அனைத்து ஆவணங்களும் இருந்தும் புதிய குடும்ப அட்டை வழங்க ஸ்ரீபெரும்புதூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஓர் ஆண்டுக்கும் மேலாக தாமதம் ஏற்பட்டு வருவதாக ‘தி இந்து’வின் உங்கள் குரலில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், போரூர் அடுத்த மதனந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன்(61). இவர், மும்பையில் ரிசர்வ் வங்கி உதவி மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் மதனந்தபுரம் கிராமத்துக்கு குடிபெயர்ந்துள்ளார். இதைத் தொடர்ந்து, பெரும்புதூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில், மும்பையில் ஏற்கெனவே வைத்திருந்த குடும்ப அட்டையை திரும்ப வழங்கியதற்கான அனைத்து ஆவணங்களையும் இணைத்து, புதிய குடும்ப அட்டை வழங்குமாறு கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விண்ணப்பித்தார். ஆனால், 13 மாதங்கள் கடந்தும் இதுவரை குடும்ப அட்டை வழங்கப்படவில்லை. இதேபோல், ஏராளமான விண்ணப்பதாரர்களும் ஆண்டுக்கணக்கில் குடும்ப அட்டைக்காக காத்திருப்பதாக ‘தி இந்து’வின் உங்கள் குரலில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நாராயணன் ‘தி இந்து’விடம் கூறும்போது, “புதிய குடும்ப அட்டைக்காக விண்ணப்பித்தவர்கள், தங்களின் விண்ணப்பங்களின் நிலை குறித்து நேரில் சென்று கேட்டாலும், அதிகாரிகள் பதில் அளிப்பதில்லை. ஓர் ஆண்டாகியும் குடும்ப அட்டை கிடைக்காததால், அரசு மூலம் நிறைவேற வேண்டிய பல்வேறு பணிகள் மற்றும் சலுகைகளை பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளோம்’’ என்றார்.
இதுகுறித்து, ஸ்ரீபெரும்புதூர் வட்ட வழங்கல் அலுவலர் புவனேஸ்வரன் கூறும்போது, “நான் பணியில் சேர்ந்து 2 மாதங்கள்தான் ஆகின்றன. எனினும், வெளி மாநிலத்திலிருந்து வந்த நபர்களின் மனுக்கள் தொடர்பாக விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே..
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்...
044-42890002 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). மறு முனையில் ஒலிக்கும் குரலின் வழிகாட்டுதல்படி, 1 அல்லது 2-ஐ அழுத்திவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். நினைத்ததை நினைத்தமாத்திரத்தில் எந்த நேரத்திலும் எங்களோடு இனி பகிர்ந்துகொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம்.