திருவாரூர்: எம்ஜிஆர் நினைவு தினத்தையொட்டி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்த வி.திவாகரன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: திராவிட கட்சிகளை அழிக்க நினைக்கும் சக்திகளை முறியடிக்க, அதிமுக, திமுக உட்பட தமிழகத்தில் செயல்படும் அனைத்து திராவிட கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா அரசியலில் முட்பாதையை கடந்துதான் முதல்வராகினர்.
ஆனால், தற்போது தங்களின் துறைகளில் வாய்ப்பு இல்லாதவர்கள் எல்லாம் முதல்வராவேன் எனக் கூறி கடைசி புகலிடமாக அரசியலுக்கு வரத் தொடங்கியுள்ளனர். எம்ஜிஆரின் கட்சிக்கு தீங்கு நினைத்தவர்கள் இன்று அவரின் பெயரைச் சொல்லி அரசியல் நடத்துகின்றனர். புதிய வேளாண் சட்டத்தை ஆதரிக்கும் தமிழக முதல்வர், அதுகுறித்து என்ன புரிந்துகொண்டார் என்று தெரியவில்லை. சசிகலாவின் நிலைப்பாடு குறித்து, அவர் சிறையில் இருந்து வந்த பிறகுதான் கூற முடியும். வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் அண்ணா திராவிடர் கழகம் 25 தொகுதிகளில் போட்டியிட உள்ளது என்றார்.