வரத்து குறைந்ததால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை 2 மடங்கு உயர்ந்துள்ளது.
கோடையின் தாக்கத்தால் கடந்த சில நாட்களாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகளின் வரத்து குறைந்து வருகிறது. இதனால், காய்கறிகளின் விலை உயர்ந்து வருகிறது.
இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் அனைத்து காய்கறி மொத்த வணிக வளாக ஆலோசகர் சவுந்தரராஜன் கூறியதாவது:
கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் குறைந்த அளவே விவசாய சாகுபடிகள் நடந்தன. இதனால், கோடை காலத்தில் கோயம்பேடு மார்க் கெட்டுக்கு காய்கறி வரத்து குறைவாகவே இருக்கிறது. விலையும் உயர்ந்து வருகிறது.
கடந்த வாரம் ஒரு கிலோ பீன்ஸ் மொத்த விலையில் ரூ.30-க்கும், சில்லறை விலையில் ரூ.35-க்கும் விற்கப்பட்டது. புதன்கிழமை இது இரு மடங்காக உயர்ந்தது.
மொத்த விலையில் ரூ.60-க்கும், சில்லறை விலையில் ரூ.70-க்கும் விற்கப்படுகிறது. அதேபோல சில்லறை விலையில் ரூ.30-க்கு விற்கப்பட்டு வந்த அவரைக்காய், தற்போது ரூ.60க்கு விற்கப்படுகிறது. அதே நேரத்தில் வழக்கமாக கோடை காலத்தில் விலை உயர்வை சந்திக்கும் சாம்பார் வெங்காயம், தற்போது கிலோ ரூ.30-க்கு மட்டுமே விற்கப்படுகிறது.
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வட மாநிலங்களில் இருந்து வழக்கமாக சாம்பார் வெங்காயம் வருவதில்லை. கடந்த 2 ஆண்டு களாக வட மாநிலங்களில் இருந்தும் வருவதால் சாம்பார் வெங்காயத்தின் விலை உயரவில்லை.
இவ்வாறு சவுந்தரராஜன் கூறினார்.