தமிழகத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வரும் மே மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகமும் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தயார் செய்து வருகிறது. ஏற்கெனவே தேர்தலுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ளன. தேவையான வி.வி.பாட் இயந்திரங்களும் மத்தியபிரதேசத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன.
இந்த மாவட்டத்துக்கான வாக்கு எண்ணும் மையமாக காஞ்சிபுரம் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியில் கல்லூரி தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் வாக்கு எண்ணும் மையத்தை எவ்வாறு அமைப்பது என்பன தொடர்பாக ஆட்சியர் மகேஸ்வரி ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா, காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் வித்யா, பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் திவ்ய உட்பட பலர் உடன் இருந்தனர்.