திருவான்மியூர் கலாஷேத்ரா காலனி பார்வதி தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பானுமதியின் மகள் வசிக்கிறார். கடந்த அக். 18-ம் தேதி அக்குடியிருப்புக்கு வந்த 5 பேரை தடுத்து நிறுத்திய, காவலர் தேவராஜ், நீங்கள் யார் என விசாரித்துள்ளார்.
அப்போது அவர்களில் ஒருவர்,தன்னை நீதிபதி எனக் கூறி, முதல்மாடியில் உள்ள நீதிபதி பானுமதியின் வீட்டுக்கு செல்ல வேண்டுமென கூறியிருக்கிறார். உடனேதேவராஜ், ‘‘தற்போது வீட்டில் யாரும் இல்லை’’ எனக் கூறி, அவர்களை உள்ளேவிட மறுத்திருக்கிறார். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் கேட்டை காலால் உதைத்து, அவதூறாக பேசியுள்ளனர். இதுகுறித்து தேவராஜ், திருவான்மியூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். போலீஸார் வருவதை அறிந்த அவர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.
திருவான்மியூர் போலீஸார் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, நீதிபதி கர்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வந்து தகராறு செய்திருப்பது தெரிந்தது. இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, முன்னாள் நீதிபதி கர்ணன் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இவ்வழக்கு தொடர்பாக, பெருங்களத்தூரைச் சேர்ந்த மனோகரன், பிரகாஷ், விஜயராகவன்,ஏகாம்பரம், சூளைமேட்டைச் சேர்ந்த குப்பன் ஆகிய 5 பேரைபோலீஸார் நேற்று கைது செய்தனர். முன்னாள் நீதிபதி கர்ணன், நீதிபதிகளை விமர்சனம் செய்தவழக்கில் ஏற்கெனவே கைதாகிசிறையில் உள்ளார். அவரையும் இவ்வழக்கில் கைது செய்திருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.
கைதான 6 பேர் மீதும் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 6 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.