பெரியாரின் 47-வது நினைவு நாளையொட்டி சென்னை வேப்பேரி பெரியார் திடலில் திராவிடர் கழகம் சார்பில் கருத்தரங்கம், விருது வழங்கும் நிகழ்ச்சிகள் நேற்று நடந்தன.
காலை 10.30 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவில் செயல்படும் பெரியார் பன்னாட்டு அமைப்பு சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு 2020-ம் ஆண்டுக்கான ‘சமூகநீதிக்கான கி.வீரமணி விருது’ வழங்கப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு `பெரியார் விருதை’ திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வழங்கினார்.
விருதை பெற்றுக் கொண்டு திருமாவளவன் பேசியதாவது:
கருணாநிதியும், ஜெயலலிதாவும் இல்லாததை பயன்படுத்தி தமிழகத்தை பிடித்து விடலாம் என்று பாஜவினர் நினைக்கிறார்கள். வட மாநிலங்களில் ராமரை பயன்படுத்துபவர்கள், தமிழகத்தில் முருகனை கையில் எடுக்கிறார்கள். சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவதைவிட, பாஜகவின் சதித் திட்டத்தை வீழ்த்துவதுதான் விசிகவின் முதல் நோக்கம். தங்களால் முடியாததால் இப்போது நடிகர்களை வைத்து தமிழகத்தில் காலூன்ற பாஜகவினர் முயற்சிக்கிறார்கள். ஆன்மிகத்தையும், மதத்தையும் பிரிக்க முடியாது. அதை முறியடிக்க திராவிடர் கழகம் வரையறுக்கும் திட்டத்தை விசிக ஏற்று செயல்படும். வரும் பேரவைத் தேர்தலில் விசிக போட்டியிட வேண்டாம் என்றாலும் அதை ஏற்போம் என்றார்.
நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன், திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், துணை பொதுச்செயலாளர் ச.இன்பக்கனி, திமுக வர்த்தகர் அணிச் செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் உள்ளிட்டோர்பங்கேற்றனர்.