தமிழகம்

வாரம் ரூ.3 கோடிக்கு ஆன்லைன் லாட்டரி விற்பனை: சென்னையைச் சேர்ந்த இருவர் கைது

செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏடிஎஸ்பி. தேவநாதன் தலைமையிலான தனிப்படை போலீஸார், ஆன்லைன் மற்றும் மூன்று நம்பர் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 22 நபர்களை கைது செய்தனர்.

இவர்கள் மூலம் விவரங்களை சேகரித்த தனிப்படை, நேற்று முன்தினம், சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த முருகநாதன்(53), முடிச்சூரைச் சேர்ந்த சையத்அலி (47) ஆகியோரை கைது செய்து, விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேடம்பட்டு சிறையில் அடைத்தனர். இவர்களிடம் இருந்து 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய், 6 லேப்–டாப்கள், 3 விலை உயர்ந்த செல்போன்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து, விழுப்புரம் தாலுகா போலீஸார், இவர்களை காவலுக்கு எடுத்து விசாரணை நடத்த குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மனு செய்தனர்.

இம்மனுவை விசாரித்த நீதித்துறை நடுவர் (பொறுப்பு) பூர்ணிமா நேற்று முன்தினம் முதல் வரும் 26-ம் தேதி வரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

இதையடுத்து முருகநாதன், சையத்அலி ஆகியோரை போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், இருவரும் ஆன்–லைன் லாட்டரி நிறுவனம் அமைத்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கிளைகளை உருவாக்கி விற்பனை செய்துள்ளனர். அதன் உரிமையாளராக முருகநாதனும், மேலாளராக சையத்அலியும் இருந்துள்ளனர்.

இவர்கள் ஒரு வாரத்துக்கு ரூ.3 கோடி அளவுக்கு லாட்டரி விற்பனை செய்து, அதில் ரூ. 1 கோடி வரை லாபம் பார்த்ததும் தெரிய வந்துள்ளது. இவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT