சென்னையில் பருவமழை காரணமாக 23 இடங்களில் மழைநீர் தேங்கியது கண்டறியப்பட்ட நிலையில், அவற்றைச் சரிசெய்வது குறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் இன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
”பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கும் தாழ்வான பகுதிகளாகக் கண்டறியப்பட்ட இடங்களில் மழைநீர் வடிகால் உட்பட பல்வேறு பணிகள் மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஆணையர் பிரகாஷ் தலைமையில் ரிப்பன் மாளிகை அம்மா அரங்கில் (24.12.2020) இன்று நடைபெற்றது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த காலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் தேக்கம் இருந்த நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளின் காரணமாகவும், மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டதன் காரணமாகவும் மழைநீர் தேக்கம் வெகுவாகக் குறைந்துள்ளது.
குறிப்பாகப் பருவமழையின் காரணமாக சென்னையில் ஒன்பது இடங்களுக்கும் குறைவான இடங்களில் மட்டும் மழைநீர் தேக்கம் இருந்தது. கடந்த மாதம் வங்கக் கடலில் உருவான நிவர் மற்றும் புரெவி புயலின் காரணமாக சென்னையில் ஒரே நாளில் தொடர்ந்து கனமழை பெய்ததனால் 23 இடங்களில் மழைநீர் தேக்கம் இருந்தது கண்டறியப்பட்டது.
எதிர்வரும் காலங்களில் இந்த 23 இடங்களில் மழைநீர் தேங்காத வண்ணம் மேற்கொள்ளப்பட வேண்டிய மழைநீர் வடிகால்வாய் அமைத்தல் மற்றும் இதர பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஆணையர் பிரகாஷ் தலைமையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆணையர் பிரகாஷ் கூறுகையில், ''நிவர் புயல் மற்றும் புரெவி புயல் காரணமாகப் பெய்த கனமழையில், மிகவும் மழைநீர் தேங்கிய 23 இடங்களில் ஒவ்வொரு இடங்களிலும் மழைநீர் தேங்கா வண்ணம் இருக்க மேற்கொள்ளப்பட வேண்டிய மழைநீர் வடிகால் வழித்தடங்களை ஆய்வு செய்து அவ்வழித் தடங்களில் மழைநீர் வடிகால் பணி தொடங்க உடனடியாக அனைத்து ஆயத்தப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
இந்த 23 இடங்களில் மழைநீர் தேங்கா வண்ணம் இருக்க 73 தெருக்களில் 32 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளக் கண்டறியப்பட்டு, கள ஆய்வு மேற்கொண்டு பணிகளைத் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்தார்.
மேலும், தற்பொழுது ஏற்பட்ட பருவமழை மற்றும் புயலின் காரணமாக சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்கவும் பழுதடைந்த மழைநீர் வடிகால்களைச் சீரமைத்துப் பராமரிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்''.
இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.