உசிலம்பட்டி துர்க்கையம்மன் கோவில் பெண் பூசாரிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உசிலம்பட்டி நல்லுத்தேவன்பட்டியைச் சேர்ந்த பின்னியக்காள் (58), உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
என் தந்தை பின்னத்தேவர் லிங்கநாயக்கன்பட்டியில் உள்ள ஸ்ரீதுர்க்கையம்மன் கோவில் பூசாரியாக இருந்தார். அவர் உடல் நலக்குறைவால் இறந்த பிறகு அவரது ஒரே வாரிசான நான் பூஜை செய்து வந்தேன். இருப்பினும் என் கிராமத்தைச் சேர்ந்த சிலர் நான் பெண் என்பதால் என்னை பூசாரி பணியை செய்யவிடாமல் தடுத்தனர். நான் பூசாரியாக பணிபுரிய வட்டாட்சியர் தடை விதித்தார்.
இதை எதிர்த்து உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தேன். என் வழக்கை விசாரித்த தனி நீதிபதி, நான் பூசாரி பணி மேற்கொள்ள தடை விதித்த வட்டாட்சியருக்கு கடும் கண்டனம் தெரிவித்து, என்னை பூசாரியாக நியமித்து 2008-ல் உத்தரவிட்டது.
இதை உயர் நீதிமன்ற அமர்வும் உறுதி செய்தது. உசிலம்பட்டி உரிமையியல் நீதிமன்றம் நான் பூசாரி பணியில் தொடர 2010-ல் அனுமதி வழங்கியது.
இருப்பினும் நான் பூசாரி பணியை நிறைவேற்ற மலையன் என்ற வாசுதேவன், குருநாதன், மாசாணன், பூங்கொடி ஆகியோர் இடையூறு செய்து வருகின்றனர். கோவிலுக்கு சென்று கொண்டிருந்த போது வழியில் தடுத்து நிறுத்தி, பெட்ரோல் ஊற்றி எரித்தும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்வதாக மிரட்டினர். இது தொடர்பாக உசிலம்பட்டி காவல் நிலையத்தில் நவ. 5-ல் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
உயர் நீதின்றம், உரிமையில் நீதிமன்றம் உத்தரவிட்டும் என்னை பூசாரி பணி செய்யவிடாமல் கடந்த 12 ஆண்டுகளாக தடுத்து வருகின்றனர். எனவே என்னை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், நான் பூசாரி பணியை இடையூறு இல்லாமல் மேற்கொள்வதற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெ.நிஷாபானு, பூசாரி பின்னியாக்காளுக்கு உடனடியாக போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டார்.