சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு குச்சனூரில் நாளை முதல் சிறப்பு வழிபாடுகள் துவங்க உள்ளது. இதற்காக சுரபிநதி சுத்தம் செய்யப்பட்டு பக்தர்களுக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
தேனி மாவட்டம் குச்சனூரில் சுயம்பு சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது. வரும் ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 5.22 மணிக்கு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சனிப்பெயர்ச்சி ஆவதால் கோயிலில் சிறப்பு பூஜை, வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை(வெள்ளி) காலை 9 மணிக்கு விநாயகர்பூஜை, கணபதி ஹோமத்துடன் லட்சார்ச்சனை துவங்குகிறது. தொடர்ந்து 12 மணிக்கு தீபாராதனை, மாலை 5 மற்றும் இரவு 7 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
நாளை மறுநாள்(சனி) காலை 9 மணிக்கு லட்சார்ச்சனை துவங்க உள்ளது. தொடர்ந்து தீபாராதனை, சிறப்பு பூஜைகள் இடம்பெறுகின்றன.
வரும் 27-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு வேதிகார்ச்சனை மற்றும் யாகவேள்வி நடைபெறும். அதிகாலை 5.22மணிக்கு மூலவருக்கு மகாதீபாராதனை, உற்சவருக்கு அபிஷேக அலங்காரம், தீபாராதனையுடன் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.
சனிப்பெயர்ச்சியின் மிதுனம், கடகம், துலாம், தனுசு, மகரம், கும்பம் போன்ற பரிகார ராசிக்காரர்கள் லட்ச்சார்ச்சனை மற்றும் ஹோமத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விழா துவங்க உள்ளதை முன்னிட்டு கோயில் அருகே உள்ள சுரபி நதி நேற்று முன்தினம் சுத்தம் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் விட்டுச் சென்ற துணிகள் குவியல்களாக கிடந்தது. இவை இயந்திரம் மூலம் எடுத்து அகற்றப்பட்டது.
பக்தர்கள் வரிசையாக தரிசனம் செய்யும் வகையில் சவுக்கு கட்டைகளால் பாதை அமைக்கப்பட்டுள்ளது. கரோனா விதிமுறைகளை பக்தர்கள் கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டும் என்று செயல்அலுவலர் வி.ரமேஷ் தெரிவித்துள்ளார்.
சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் அருகே உள்ள சுரபி நதி சுத்தப்படுத்தப்பட்டது. இதில் பக்தர்கள் விட்டுச் சென்ற ஏராளமான துணி குவியல்கள் அகற்றப்பட்டன.