தமிழகம்

புரெவி புயல் பாதிப்பு ஆய்வு: டிச.28-ல் மத்தியக் குழு தமிழகம் வருகை

செய்திப்பிரிவு

புரெவி புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக் குழு வரும் டிச.28 அன்று ஆய்வு செய்ய தமிழகம் வர உள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“கடந்த நவம்பர் மாதம் 25 மற்றும் 26ஆம் தேதிகளில் நிவர் புயலால் ஏற்பட்ட கனமழையின் காரணமாக, தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில், 41 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் நெற்பயிர், வாழை, தென்னை மற்றும் பல்வேறு பயிர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டன. இப்புயலினால் ஏற்பட்ட பயிர் சேதத்தினை உடனடியாக கணக்கீடு செய்யுமாறு வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலர்களுக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார்.

இக்கணக்கெடுப்புப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, டிசம்பர் 3-ம் தேதி முதல் புரெவி புயல் தாக்கத்தினால், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், பெரம்பலூர், விழுப்புரம் உள்ளிட்ட 25 மாவட்டங்களில் அதிக கனமழை பெய்தது. அதனால், சம்பா மற்றும் தாளடிப் பருவத்தில் நடவு செய்யப்பட்டிருந்த நெற்பயிரும் மற்றும் இதர வேளாண் பயிர்களும், வாழை, வெங்காயம், மிளகாய் போன்ற தோட்டக்கலைப் பயிர்களும் ஏறத்தாழ 6 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான அளவில் பாதிக்கப்பட்டன.

டிச.8 மற்றும் டிச.9 ஆகிய நாட்களில், கடலூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்வர், வெள்ளம் மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களின் கணக்கெடுப்புப் பணியினை விரைந்து மேற்கொள்ளுமாறு கள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி, வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் வருவாய்த்துறை அலுவலர்களுடன் இணைந்து, விவசாயிகள் வாரியாக வயலாய்வுப் பணி மேற்கொண்டு, 33 சதவீதத்துக்கு மேல் சேதமடைந்த பயிர்கள் மற்றும் விவசாயிகளின் விவரங்கள் கணக்கெடுப்பு செய்யப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பெயர், பட்டா/ சர்வே எண், வங்கிக் கணக்கு விவரங்கள், ஆதார் விவரங்கள் போன்றவை சேகரிக்கப்பட்டு, கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்ட எந்தவொரு விவசாயியும் விடுபடக்கூடாது என்ற முதல்வரின் உத்தரவினை உறுதி செய்யும் வகையில், சரியான பயிர் சேத விவரங்கள் மற்றும் விவசாயிகளின் விவரங்களைக் கணக்கீடு செய்யவும், அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, நெற்பயிர்களைப் பொறுத்தவரையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வயல்களில் வெள்ளநீர் முழுமையாக வடிந்த பிறகு, பயிர் சேத விவரங்களை முழுமையாகக் கணக்கிட்டு, சரிபார்க்க அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். விவசாயிகளின் பயிர் சேத விவரங்களுடன் அவர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்கள் விரைவாக சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த விவரங்கள் வங்கிக் கணக்குகளுடன் ஒத்திசைவு செய்யும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளது.

மேலும், நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக் குழு ஆய்வு செய்ததுபோல், புரெவி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய மத்தியக் குழு டிச.28 அன்று வருகை தரவுள்ளது. இந்த ஆய்வு முடிந்தபின், மத்தியக் குழுவின் அறிவுரைப்படி, புள்ளிவிவரங்கள் இறுதி செய்யப்பட உள்ளன.

பாதிப்படைந்த விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, கணினியில் பதிவேற்றம் செய்தபின், பயிர் சேத விவரங்கள் குறித்த முழுமையான அறிக்கை அரசுக்கு விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அதன் அடிப்படையில் விரைவாக அரசால் உரிய நிவாரணம் வழங்கப்படும்”.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT