திமுக ஆட்சிக்கு வந்த உடன் 100 நாள் வேலைத் திட்டம் 300 நாட்களாக உயர்த்தப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறினார்.
'அதிமுகவை நிராகரிப்போம்' என்ற தலைப்பில் திமுக சார்பில் பல்வேறு பகுதியில் கிராமசபைக் கூட்டங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆலங்காயம், கசிநாயக்கன்பட்டி மற்றும் திருப்பத்தூர் நகர் பகுதியில் இன்று நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கலந்துகொண்டு பேசினார்.
திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி மேம்பாலம் அருகே இன்று நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்ற துரைமுருகன் பேசியதாவது:
''ஜெயலலிதாவுக்குத்தான் மக்கள் வாக்களித்தனர். அவர் உயிரோடு இல்லாததால் பழனிசாமி அதிர்ஷ்டவசமாக முதல்வர் ஆகிவிட்டார். கடந்த தேர்தலில் பழனிசாமி முதல்வராக வருவார் என மக்கள் யாருமே நினைக்கவில்லை. நினைத்திருந்தால் அதிமுக வெற்றி பெற்றிருக்காது.
10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் நடந்த திட்டங்களையும், அதன்பிறகு 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் நடைபெற்றுள்ள திட்டங்களையும் மக்கள் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அப்போது தெரியும் யார் சிறந்த ஆட்சியாளர்கள் என்று. திமுக ஆட்சியின்போது வழங்கப்பட்ட கலர் டிவி தற்போது வரை நல்ல நிலையில் உள்ளது. அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட மிக்ஸி, கிரைண்டர் ஓராண்டுக்குப் பிறகு செயலற்றுப் போனது. மக்கள் யாருமே அதைப் பயன்படுத்தவில்லை.
தரமான பொருட்களை மக்களுக்கு வழங்கியது திமுக ஆட்சியில்தான். தரமற்ற பொருட்களை வழங்கி மக்களை அதிமுக அரசு ஏமாற்றி வருகிறது. இதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். உங்களை ஏமாற்றிய அதிமுகவை வரும் தேர்தலில் ஏமாற்ற வேண்டும். கடந்த முறை அதிமுகவுக்கு வாக்களித்ததால் விலைவாசி சொல்ல முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. எரிவாயு சிலிண்டர் விலை ரூ.800 வரை உயர்ந்துவிட்டது. அடுத்த முறை வாக்களித்தால் ரூ.1000 முதல் ரூ.2000 வரை விலை உயரவும் வாய்ப்புள்ளது.
கரோனா காலத்தில் வேலை இழந்து சிரமப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு ரூ.5000 வழங்க வேண்டும் என திமுக கூறியது. ஆனால், ரூ.1000 வழங்கிய அதிமுக அரசு அதன் பிறகு எதையும் வழங்கவில்லை.
தற்போது தேர்தல் நெருங்கி வருவதால் பொங்கல் பரிசாகக் கரும்பு, அரிசியுடன் ரூ.2,500 வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது மக்களை ஏமாற்றும் செயல். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடே வேளாண் சட்டங்களை எதிர்க்கும்போது அதிமுக அரசு ஆதரவு தெரிவிக்கிறது. இதில் முதல்வர் பழனிசாமி, தான் ஒரு விவசாயி எனக் கூறி வருவது நகைப்புக்குரியதாக உள்ளது.
திமுக ஆட்சிக்காலத்தில் விவசாயக் கடன் ரூ.7 ஆயிரம் கோடியைக் கருணாநிதி தள்ளுபடி செய்தார். அதிமுக ஆட்சிக்காலத்தில் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தார்களா? அதேபோல, 100 நாள் வேலைத் திட்டத்தில் பல்வேறு ஊழல்கள் காணப்படுகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த உடன் 100 நாள் வேலை திட்டம் 300 நாட்களாக உயர்த்தப்படும்.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுக் கிடக்கிறது. பெண்கள் தனியாக வெளியே நடந்துசெல்ல முடியவில்லை. சங்கிலிப் பறிப்பு, வழிப்பறி, வீடு புகுந்து திருட்டு எனக் குற்றச்செயல்கள் பெருகிவிட்டன. எல்லாவற்றிக்கும் மேலாக குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை பெருகிவிட்ட அரசாக அதிமுக அரசு விளங்கிக்கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் முடிவு கட்ட வேண்டிய காலம் நெருங்கிவிட்டது. வரும் தேர்தலில் அதிமுகவை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற கிராம சபைக்கூட்டங்கள் திமுக சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன.''
இவ்வாறு துரைமுருகன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி, திமுக மாவட்டப்பொறுப்பாளர் தேவராஜ், நகரச் செயலாளர் ராஜேந்திரன் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.